குவாங்ஜு: உலக வில்வித்தை காம்பவுண்டு பிரிவில் இந்திய ஆண்கள் அணி தங்கப்பதக்கம் கைப்பற்றியது.
தென் கொரியாவில் உலக வில்வித்தை ‘ஸ்டேஜ் 2’ போட்டிகள் நடக்கின்றன. ஆண்கள் காம்பவுண்டு பிரிவு பைனலில் உலகத் தரவரிசையில் 4வது இடத்திலுள்ள இந்தியாவின் அபிஷேக் சர்மா, ரஜத் சவுகான், அமன் செய்னி அடங்கிய அணி, ‘நம்பர்–6’ இடத்திலுள்ள பிரான்சின் அட்ரியன், ஜீன் பிலிப், குயின்டின் இடம் பெற்ற அணியை சந்தித்தது.
கடந்த ஆண்டு பைனலில் இதே இந்திய அணி 1 புள்ளி வித்தியாசத்தில் பிரான்சை வென்றிருந்தது. இம்முறை முதல் இரு சுற்று முடிவில் இந்தியா 114–115 என பின்தங்கியது. மூன்றாவது சுற்றில் (60–56) அசத்திய இந்தியா 174–171 என முந்தியது.
கடைசி, நான்காவது சுற்றில் (58–59) சற்று தடுமாறிய போதும், முடிவில் இந்திய அணி 232–230 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தங்கப்பதக்கம் கைப்பற்றியது.
பரத்வாஜ் ‘வெள்ளி’
ஆண்கள் தனிநபர் காம்பவுண்டு பிரிவு பைனலில் இந்தியாவின் பரத்வாஜ், நெதர்லாந்தின் மைக்கை சந்தித்தார். இதில் துவக்கத்தில் இருந்தே பின் தங்கிய பரத்வாஜ், கடைசியில் 112–119 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
மீண்டும் வெண்கலம்
காம்பவுண்டு கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலத்துக்கான போட்டியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, அவ்னீத் கவுர் ஜோடி, துருக்கியை சந்தித்தது. முதல் மூன்று சுற்றில் பின்தங்கி இருந்த இந்தியா, கடைசி சுற்றில் எழுச்சி பெற்று 156–155 என வெற்றி பெற்று, பதக்கம் தட்டிச் சென்றது.
இத்தொடரில் இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் நான்கு பதக்கம் வென்றது.