குவாங்ஜு: உலக வில்வித்தையில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, அவ்னீத் கவுர் ஜோடி இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்க உள்ளது.
தென் கொரியாவில் உலக வில்வித்தை ‘ஸ்டேஜ் 2’ போட்டிகள் நடக்கின்றன.காம்பவுண்டு கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, அவ்னீத் கவுர் ஜோடி, காலிறுதியில் 156–153 என மெக்சிகோவை வென்றது. அரையிறுதியில் 156–158 என எஸ்தோனியாவிடம் வீழ்ந்தது. இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் துருக்கியை சந்திக்கிறது.
ஆண்கள் ‘ரீகர்வ்’ தனிநபர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் ஜெயந்த் தாலுக்தர், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துருக்கியின் மெடே கோமசை 6–0 என வீழ்த்தி அசத்தினார். காலிறுதியில் 5–6 என தென் கொரியாவின் கிம் ஊஜினிடம் ‘ஷூட் ஆப்’ முறையில் தோற்று வெளியேறினார்.
மற்ற போட்டிகளில் தருண்தீப் ராய் 3வது சுற்று, சச்சின் குப்தா 2வது சுற்றுடன் திரும்பினர்.
பெண்கள் ‘ரீகர்வ்’ பிரிவில் இந்தியாவின் ரிதி 3வது சுற்று, அன்கிதா பகத் 2வது சுற்று, சிம்ரன்ஜீத் கவுர், கோமலிகா முதல் சுற்றில் தோல்வியடைந்தனர். ‘ரீகர்வ்’ கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தருண்தீப் ராய், ரிதி ஜோடி, ஜெர்மனியின் காத்தரினா, பெலிக்ஸ் ஜோடியிடம் 1–5 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.