புதுடில்லி: காமன்வெல்த் தகுதி போட்டியில் நடுவரை தாக்கிய சடேந்தருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் 22 வது காமன்வெல்த் விளையாட்டு வரும் ஜூலை 23 முதல் ஆக. 8 வரை நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய மல்யுத்த நட்சத்திரங்களுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் டில்லியில் நடக்கின்றன. நேற்று ஆண்களுக்கான போட்டிகள் நடந்தன.
125 கிலோ எடைப்பிரிவு பைனலில் சடேந்தர் மாலிக், மோகித் மோதினர். போட்டி முடிய 18 வினாடிகள் இருந்த போது சடேந்தர் 3–0 என முன்னிலையில் இருந்தார். அப்போது சடேந்தரை ‘டேக் டவுன்’ முறையில் கீழே தள்ளி 2 புள்ளி பெற முயன்றார் மோகித். தவிர சடேந்தரை ‘மேட்டை’ விட்டு வெளியே தள்ளினார்.
விதிப்படி இதற்கு 2+1 என 3 புள்ளிகள் தர வேண்டும். ஆனால் நடுவர் வீரேந்தர் மாலிக் 1 புள்ளி மட்டும் தர, மோகித் எதிர்த்து அப்பீல் செய்தார். இதை வீடியோ உதவியால் ஆராய்ந்த ஜக்பிர் சிங் தலைமையிலான நடுவர் குழு, மோகித்திற்கு 3 புள்ளி வழங்கியது. போட்டி முடிவுக்கு வந்தது. ஸ்கோர் 3–3 என சமனில் இருந்தால், மல்யுத்த விதிப்படி கடைசியாக புள்ளி பெற்ற வீரர் தான் வெற்றியாளர். இதனால் மோகித் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
கோபமடைந்த சடேந்தர், ஜக்பிர் சிங்கை திட்டிக் கொண்டே அடித்து கீழே தள்ளினார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகள் முன்னிலையில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்ட சடேந்தருக்கு, மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
ரவிக்குமார் தகுதி
பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்க டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ரவிக்குமார் (57 கிலோ), வெண்கலம் கைப்பற்றிய பஜ்ரங் புனியா (65 கிலோ), நவீன் (74 கிலோ), தீபக் புனியா (86 கிலோ), தீபக் (97 கிலோ), மோகித் (125 கிலோ) தகுதி பெற்றனர்.