புதுடில்லி: இந்தியாவுக்கு எதிரான ‘டி–20’ தொடரில் பங்கேற்கும் தென் ஆப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டது.
இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் ஜூன் 9ல் டில்லியில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் கட்டாக் (ஜூன் 12), விசாகப்பட்டினம் (ஜூன் 14), ராஜ்கோட் (ஜூன் 17), பெங்களூருவில் (ஜூன் 19) நடக்கவுள்ளன.
வரும் அக்டோபர்–நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள ‘டி–20’ உலக கோப்பைக்கு, இத்தொடர் பயிற்சியாக இருக்கும். இதனிடையே இந்தியாவுக்கு எதிரான தொடரில் மோதும் தென் ஆப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக பவுமா தொடர்கிறார். கடந்த ‘டி–20’ உலக தொடருக்குப் பின் காயத்தால் விலகிய வேகப்பந்து வீச்சாளர் நார்ட்ஜே மீண்டும் சேர்க்கப்பட்டார்.
இவர் தற்போது டில்லி அணிக்காக கடந்த 5 போட்டிகளில் 7 விக்கெட் சாய்த்த ‘பிட்னஸ்’ நிரூபித்துள்ளார். தென் ஆப்ரிக்க உள்ளூர் ‘டி–20’ தொடரில் அதிக ரன் எடுத்த வீரர்களில் இரண்டாவது இடம் பிடித்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அறிமுக வாய்ப்பு பெற்றார். சொந்தமண்ணில் வங்கதேச டெஸ்ட் தொடரில் பங்கேற்காமல், இந்திய ‘டி–20’ ல் விளையாட வந்த வீரர்களுக்கும் வாய்ப்பு தரப்பட்டது.
அணி விபரம்: பவுமா (கேப்டன்), குயின்டன் டி காக், ஹென்ரிக்ஸ், கிளாசன், மஹராஜ், மார்க்ரம், மில்லர், லுங்கிடி, நார்ட்ஜே, பார்வெல், பிரிட்டோரியஸ், ரபாடா, ஷம்சி, டிரிஸ்டியன் ஸ்டப்ஸ், வான் டெர் துசென், ஜான்சென்.