புதுடில்லி: ‘ஜூனியர் ஸ்பீடு’ செஸ் தொடரின் பைனலுக்கு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முன்னேறினார் நிகால் சரின்.
உலகின் முன்னணி ‘ஜூனியர்’ நட்சத்திரங்கள் பங்கேற்கும் ‘ஸ்பீடு’ செஸ் சாம்பியன்ஷிப் (20 வயதுக்குட்பட்ட) ஆன்லைனில் நடக்கிறது. மொத்தம் ரூ.27 லட்சம் பரிசுத் தொகை கொண்டது. இதன் ‘நாக் அவுட்’ முறையிலான பிரதான சுற்றில் 16 பேர் மோதுகின்றனர். இந்தியா சார்பில் நிகால் சரின், பிரக்ஞானந்தா, அர்ஜூன், ரானக் சத்வானி என 4 பேர் பங்கேற்றனர்.
கடந்த 2020, 2021 என தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக சாம்பியன் ஆன நிகால் சரின், அரையிறுதியில் அமெரிக்காவின் அவாண்டர் லியாங்கை சந்தித்தார்.
இருவரும் 30 சுற்றில் மோதினர். இதில் 20 போட்டியில் வெற்றி பெற்ற நிகால் சரின், 5 ல் ‘டிரா’ செய்தார். மீதமுள்ள போட்டிகளில் தோற்ற போதும், மொத்தம் 27.5–7.5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பைனலுக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி, அஜர்பெய்ஜானின் முகமது முரட்லியை சந்தித்தார். இதில் அர்ஜுன் 15 போட்டிகளில் வென்றார். 4ல் ‘டிரா’ செய்ய, 17.0–11.0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதில் அமெரிக்காவின் ஹன்ஸ் ஹெய்மானை சந்திக்கிறார். இப்போட்டியில் வெல்லும் வீரர் பைனலில் நிகால் சரினை சந்திப்பர்.