ரோம்: சர்வதேச டென்னிஸ் அரங்கில் 999 வது வெற்றி பெற்றார் ஜோகோவிச்.
இத்தாலியில் ரோம் சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் ‘நம்பர்–1’ வீரர், செர்பியாவின் ஜோகோவிச், கனடாவின் ஆகர் அலியாசிமியை சந்தித்தார். இதில் கடும் போராட்டத்துக்குப் பின் ஜோகோவிச், 7–5, 7–6 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
சர்வதேச அரங்கில் 2007ல் தனது 19 வயதில் அறிமுகம் ஆன ஜோகோவிச்சிற்கு, இது 999 வது வெற்றியாக அமைந்தது. அரையிறுதியில் நார்வேயின் காஸ்பர் ரூடை சந்திக்கிறார். இதில் வெல்லும் பட்சத்தில் சர்வதேச அரங்கில் 1000வது வெற்றியை பதிவு செய்து சாதிக்கலாம்.
பைனலில் ஸ்வியாடெக்
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகின் ‘நம்பர்–1’ வீராங்கனை, போலந்தின் ஸ்வியாடெக், பெலாரசின் சபலென்காவை சந்தித்தார். இதில் ஸ்வியாடெக் 6–2, 6–1 என எளிதாக வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். சர்வதேச அரங்கில் இவர் தொடர்ச்சியாக பெற்ற 27வது வெற்றியாக இது அமைந்தது.
சானியா ‘ஷாக்’
பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் லுாசி ஹிரடெக்கா ஜோடி, கனடாவின் கேபிரியலா, மெக்சிகோவிவ் ஆல்மோஸ் ஜோடியை சந்தித்தது. இதில் சானியா ஜோடி 1–6, 2–6 என தோல்வியடைந்தது.
5
சர்வதேச டென்னிசில் அதிக வெற்றிகள் பெற்ற வீரர் வரிசையில் ஜோகோவிச், ஐந்தாவது (999) இடத்தில் உள்ளார். இதில் ‘டாப்–5’ வீரர்கள் விபரம்:
வீரர்/நாடு வெற்றி
ஜிம்மி கானர்ஸ்/அமெரிக்கா 1274
பெடரர்/சுவிட்சர்லாந்து 1251
இவான் லெண்டில்/அமெரிக்கா 1068
நடால்/ஸ்பெயின் 1051
ஜோகோவிச்/செர்பியா 999