பாங்காக்: தாமஸ் கோப்பை பாட்மின்டன் பைனலுக்கு முதன்முறையாக முன்னேறி வரலாறு படைத்தது இந்தியா.
தாய்லாந்தில், அணிகளுக்கு இடையிலான தாமஸ், உபர் கோப்பை பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான தாமஸ் கோப்பை அரையிறுதியில் இந்தியா, டென்மார்க் அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென் 13–21, 13–21 என டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சனிடம் தோல்வியடைந்தார்.
இரட்டையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21–18, 21–23, 22–20 என, டென்மார்க்கின் கிம் ஆஸ்டிரப், மதியாஸ் கிறிஸ்டியன்சன் ஜோடியை வீழ்த்தியது.
ஒற்றையர் பிரிவு 2வது போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21–18, 12–21, 21–15 என, டென்மார்க்கின் ஆன்டர்ஸ் ஆன்டன்சனை தோற்கடித்தார். இரட்டையர் பிரிவு 2வது போட்டியில் ஏமாற்றிய இந்தியாவின் கிருஷ்ண பிரசாத், விஷ்னுவர்தன் ஜோடி தோல்வியடைந்தது. ஒற்றையர் பிரிவு 3வது போட்டியில் எழுச்சி கண்ட பிரனாய் 13–21, 21–9, 21–12 என டென்மார்க்கின் ராஸ்மசை வீழ்த்தினார்.
முடிவில் இந்திய அணி 3–2 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. இதில், இந்தோனேஷியாவை எதிர்கொள்கிறது.