கேசியாஸ்: ‘டெப்லிம்பிக்ஸ்’ டென்னிஸ் இரட்டையரில் இந்திய ஜோடி வெள்ளி வென்றது.
பிரேசிலில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான 24 வது ‘டெப்லிம்பிக்ஸ்’ போட்டி நடக்கிறது. இந்தியா சார்பில் எப்போதும் இல்லாத வகையில் அதிகபட்சம் 65 வீரர், வீராங்கனைகள், 11 போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
ஆண்கள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பில் பிரித்வி சேகர், தனஞ்செய் துபே ஜோடி பங்கேற்றது. சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜோடி பைனலுக்கு முன்னேறியது. இதில் பிரான்சின் அலிக்ஸ் லாரன்ட், வின்சென்ட் ஜோடியை எதிர் கொண்டது.
‘டை பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை இந்திய ஜோடி 6–7 என கோட்டை விட்டது. அடுத்த செட்டிலும் ஏமாற்ற 2–6 என நழுவவிட்டது. முடிவில் இந்திய ஜோடி 6–7, 2–6 என்ற நேர் செட்கணக்கில் தோல்வியடைந்தது. இருப்பினும் வெள்ளிப்பதக்கம் தட்டிச் சென்றது.
ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் பல்ராம், பைனலுக்கு முன்னேறினார். பெண்களுக்கான துப்பாக்கிசுடுதல் 50 மீ., ‘ரைபிள் 3 பொசிசன்ஸ்’ போட்டியில் மொத்தம் 1099 புள்ளிகள் பெற்ற மோனிகா, ஆறாவது இடம் பெற்று ஏமாற்றினார்.
இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் இந்தியா 7 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்றுள்ளது.