சுஹ்ல்: ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதலில் நேற்று இந்தியாவுக்கு நான்கு தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.
ஜெர்மனியில் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடக்கிறது. இதில் பெண்கள் அணிகளுக்கான 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவு பைனலில் இந்தியா, ஜார்ஜியா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய மனு பாகர், பாலக், ஈஷா சிங் அடங்கிய இந்திய அணி 16–8 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
ஆண்கள் அணிகளுக்கான 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவு பைனலில் இந்தியா, உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. இதில் அசத்தலாக ஆடிய சவுரப் சவுத்தரி, ஷிவா நார்வல், சரப்ஜோத் சிங் அடங்கிய இந்தியா 17–9 என வெற்றி பெற்று தங்கம் வென்றது.
பெண்கள் அணிகளுக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவு பைனலில் ரமிதா, ஜீனா கிட்டா, ஆர்யா போர்ஸ் அடங்கிய இந்திய அணி 17–9 என்ற கணக்கில் தென் கொரிய அணியை தோற்கடித்து தங்கத்தை தன்வசப்படுத்தியது.
ஆண்கள் அணிகளுக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவு பைனலில் பார்த் மகிஜா, உமாமகேஷ், ருத்ராங்க் ஷ் பாலாசாஹேப் பாட்டீல் இடம் பெற்றுள்ள இந்திய அணி 16–8 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.
இதுவரை எட்டு தங்கம், ஆறு வெள்ளி என, 14 பதக்கங்கள் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்த இரு இடங்களில் ஆஸ்திரேலியா (ஒரு தங்கம், ஒரு வெள்ளி), பிரான்ஸ் (ஒரு தங்கம், 3 வெண்கலம்) அணிகள் உள்ளன.