மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில், ஜெர்மனியின் ஸ்வெரேவை தோற்கடித்தார்.
ஸ்பெயினில், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 19, ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 25, மோதினர். காலிறுதியில் நடால், அரையிறுதியில் ஜோகோவிச் என முன்னணி வீரர்களுக்கு அதிர்ச்சி தந்த அல்காரஸ் துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டை 6–3 எனக் கைப்பற்றிய இவர், இரண்டாவது செட்டை 6–1 என வென்றார்.
ஒரு மணி நேரம், 2 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய அல்காரஸ் 6–3, 6–1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக கோப்பை வென்றார். இது, இந்த சீசனில் இவரது 4வது பட்டம். ஏற்கனவே ரியோ ஓபன், மயாமி ஓபன், பார்சிலோனா ஓபனில் கோப்பை வென்றிருந்தார். ஒட்டுமொத்தமாக இது, இவரது 5வது ஏ.டி.பி., ஒற்றையர் பட்டம். கடந்த ஆண்டு குரோஷிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். தவிர இவர், இளம் வயதில் இரண்டு மாஸ்டர்ஸ் பட்டம் (மயாமி, மாட்ரிட்) வென்ற இரண்டாவது வீரரானார். ஏற்கனவே ஸ்பெயினின் நடால், தனது 18 வயதில் மான்டே கார்லோ, ரோம் என இரண்டு மாஸ்டர்ஸ் தொடரில் (2005) சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 9வது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு முன்னேறிய அல்காரஸ், வலது கணுக்கால் காயம் காரணமாக ரோமில் நடக்கும் இத்தாலி ஓபனில் இருந்து விலகினார்.