மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் டுனிசிய வீராங்கனை ஜபேயுர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில் அமெரிக்காவின் பெகுலாவை வீழ்த்தினார்.
ஸ்பெயினில், மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்–10’ டுனிசியாவின் ஜபேயுர், 14வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா மோதினர். முதல் செட்டை 7–5 என போராடி கைப்பற்றிய ஜபேயுர், இரண்டாவது செட்டை 0–6 என மோசமாக இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் எழுச்சி கண்ட இவர், 6–2 என தன்வசப்படுத்தி பதிலடி தந்தார்.
ஒரு மணி நேரம், 54 நிமிடம் நீடித்த போட்டியில் ஜபேயுர் 7–5, 0–6, 6–2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக கோப்பை வென்றார். இது, இவரது 2வது டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பட்டம். கடந்த ஆண்டு பர்மிங்காம் கிளாசிக் தொடரில் கோப்பை வென்றிருந்தார்.
ஜோகோவிச் தோல்வி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் மோதினர். மூன்று மணி நேரம், 35 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய ஜோகோவிச் 7–6, 5–7, 6–7 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தார். மற்றொரு அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6–4, 3–6, 6–2 என கிரீசின் ஸ்டெபானஸ் டிசிட்சிபாசை தோற்கடித்தார்.