புதுடில்லி: உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் முதன் முறையாக 38வது இடத்துக்கு முன்னேறினார் மணிகா.
சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் புதிய தரவரிசை பட்டியல் வெளியானது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசை (‘ரேங்கிங்’) பட்டியலில் இந்தியாவின் மணிகா பத்ரா, 540 புள்ளிகள் பெற்று 10 இடங்கள் முன்னேறி, முதன் முறையாக 38வது இடம் பிடித்தார்.
இந்திய டேபிள் டென்னிஸ் வரலாற்றில் பெண்கள் ஒற்றையரில் பிடித்த சிறந்த இடம் இது.
மற்றொரு இந்திய வீராங்கனை அர்ச்சனா, 26 இடங்கள் முன்னேறி 66 வது இடம் பெற்றார். 39 இடங்கள் முந்திய ஸ்ரீஜா, 68 வது இடம் பிடித்தார். ரீத் டென்னிசன் 97, சுதிர்தா 119 வது இடங்களில் உள்ளனர்.
ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சத்யன், 5 இடங்கள் முன்னேறி 34வது இடம் பெற்றார். மற்றொரு வீரர் அஜந்தா சரத் கமல் 37 வது இடம் பிடித்தார். ஆண்கள் இரட்டையரில் சத்யன், ஹர்மீத் தேசாய் ஜோடி 29, சத்யன், சரத் கமல் ஜோடி 34வது இடத்தில் உள்ளது.
பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் மணிகா, அர்ச்சனா ஜோடி தொடர்ந்து 4வது இடத்தில் நீடிக்கிறது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மணிகா, சத்யன் ஜோடி ஒரு இடம் முன்னேறி 6வது இடம் பிடித்தது.