மலப்புரம்: சந்தோஷ் டிராபி கால்பந்து பைனலில் அசத்திய கேரளா அணி 5–4 என்ற கணக்கில் ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. மேற்கு வங்க அணி ஏமாற்றம் அடைந்தது.
கேரள மாநிலம் மலப்புரத்தில், சீனியர் ஆண்களுக்கான சந்தோஷ் டிராபி தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 75வது சீசன் நடந்தது. இதன் பைனலில் கேரளா, மேற்கு வங்கம் அணிகள் மோதின. இரு அணி வீரர்களும் ஆதிக்கம் செலுத்த, நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட முடிவில் போட்டி 0–0 என சமநிலையில் இருந்தது.
இரு அணிகளுக்கும் தலா 15 நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் 97வது நிமிடத்தில் மேற்கு வங்க அணியின் திலிப் ஒரு கோல் அடித்து 1–0 என முன்னிலை பெற்றுத்தந்தார். இதற்கு, 116வது நிமிடத்தில் கேரளா அணியின் முகமது சப்னாத் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுக்க, போட்டி 1–1 என மீண்டும் சமநிலை வகித்தது.
இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறைக்கு சென்றது. இதில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அபாரமாக ஆடிய கேரளா அணி 5–4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 7வது முறையாக சாம்பியன் கோப்பை வென்றது. தவிர சந்தோஷ் டிராபி கால்பந்து பைனலில் 2வது முறையாக மேற்கு வங்கத்தை வீழ்த்தியது கேரளா. இதற்கு முன் 2017–18 சீசன் பைனலில் மேற்கு வங்கத்தை வீழ்த்தியது.