மலப்புரம்: சந்தோஷ் டிராபி கால்பந்து பைனலில் இன்று கேரளா, மேற்கு வங்கம் அணிகள் மோதுகின்றன.
கேரள மாநிலம் மலப்புரத்தில், சீனியர் ஆண்களுக்கான சந்தோஷ் டிராபி தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 75வது சீசன் நடக்கிறது. இன்று நடக்கவுள்ள பைனலில் கேரளா அணி, மேற்கு வங்கத்தை எதிர்கொள்கிறது.
லீக் சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்திருந்த கேரளா அணி, 4 போட்டியில், 3 வெற்றி, ஒரு ‘டிரா’ என 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் 7–3 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவை தோற்கடித்து 15வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது. முன்னதாக விளையாடிய 14 பைனலில் 6ல் வென்று கோப்பையை கைப்பற்றியது. எட்டு முறை 2வது இடம் பிடித்தது.
லீக் சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த மேற்கு வங்க அணி, 4 போட்டியில், 3 வெற்றி, ஒரு தோல்வி என 9 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதில் 3–0 என்ற கோல் கணக்கில் மணிப்பூரை வீழ்த்தி 46வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது. முன்னதாக விளையாடிய 45 பைனலில், 32ல் வெற்றி பெற்று கோப்பை வென்றது. 13ல் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது.
சந்தோஷ் டிராபி பைனலில் கேரளா–மேற்கு வங்க அணிகள் 4வது முறையாக மோதவுள்ளன. முன்னதாக விளையாடிய 3 பைனலில் 2ல் (1988–89, 93–94) மேற்கு வங்கம் வெற்றி பெற்றது. ஒரு முறை (2017–18) கேரளா வென்றது.