புதுடில்லி: ரஞ்சி கோப்பை ‘நாக்–அவுட்’ சுற்றுக்கான அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 87வது சீசன் (2021–22), லீக், ‘நாக்–அவுட்’ என, இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. சமீபத்தில் தமிழகம், மும்பை, ‘நடப்பு சாம்பியன்’ சவுராஷ்டிரா உள்ளிட்ட 38 அணிகள், 9 பிரிவுகளாக ‘ரவுண்டு ராபின்’ முறையில் லீக் சுற்றில் பங்கேற்றன. முடிவில் மும்பை, கர்நாடகா, பஞ்சாப், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், பெங்கால், மத்திய பிரதேசம் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.
சமீபத்தில் ‘நாக்–அவுட்’ சுற்றுக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வெளியிட்டது. இதில் காலிறுதி வரும் ஜூன் 4–8, அரையிறுதி ஜூன் 12–16, பைனல் ஜூன் 20–24ல் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த அட்வணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் தாமதமாக போட்டிகள் துவங்கவுள்ளன. புதிய அட்டவணையின் படி காலிறுதி வரும் ஜூன் 6–10ல் நடக்கும். இதில் வெற்றி பெறும் அணிகள் ஜூன் 14–18ல் அரையிறுதியில் மோதும். பைனல், ஜூன் 22–26ல் நடக்கும்.
முதல் காலிறுதியில் பெங்கால், ஜார்க்கண்ட் அணிகள் மோத உள்ளன. மற்ற காலிறுதிப் போட்டிகளில் மும்பை–உத்தரகாண்ட், கர்நாடகா–உத்தர பிரதேசம், பஞ்சாப்–மத்திய பிரதேசம் அணிகள் விளையாட உள்ளன. ஏற்கனவே அறிவித்தபடி போட்டிகள் அனைத்தும் கர்நாடகா மாநிலம் பெங்களூவில் நடக்கும். பைனல், சின்னசாமி மைதானத்தில் நடத்தப்படும்.