மலப்புரம்: சந்தோஷ் டிராபி கால்பந்து தொடரின் பைனலுக்கு மேற்கு வங்க அணி முன்னேறியது. அரையிறுதியில் 3–0 என, மணிப்பூர் அணியை வீழ்த்தியது.
கேரள மாநிலம் மலப்புரத்தில், சீனியர் ஆண்களுக்கான சந்தோஷ் டிராபி தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 75வது சீசன் நடக்கிறது. இதன் முதல் அரையிறுதியில் கேரளா அணி 7–3 என கர்நாடகா அணியை வீழ்த்தியது.
இரண்டாவது அரையிறுதியில் மணிப்பூர், மேற்க வங்கம் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய மேற்கு வங்க அணி 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 46வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது. முன்னதாக விளையாடிய 45 பைனலில், 32ல் வெற்றி பெற்று கோப்பை வென்றது. 13ல் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது. மேற்கு வங்கம் சார்பில் சுஜித் சிங் (2வது நிமிடம்), முகமது பர்தின் அலி (7வது), திலிப் ஓரான் (74வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.
வரும் மே 2ல் நடக்கவுள்ள பைனலில் கேரளா, மேற்கு வங்கம் அணிகள் மோதுகின்றன. சந்தோஷ் டிராபி பைனலில் இவ்விரு அணிகள் 4வது முறையாக மோதவுள்ளன. முன்னதாக விளையாடிய 3 பைனலில் 2ல் (1988–89, 93–94) மேற்கு வங்கம் வெற்றி பெற்றது. ஒரு முறை (2017–18) கேரளா வென்றது.