புதுடில்லி: ஆசிய கோப்பை தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்க உள்ளது.
ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் 1984 முதல் நடத்தப்படுகிறது. இதுவரை தென் கொரியா 4, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தலா 3 முறை கோப்பை வென்றன. இதன் 11வது தொடர் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் வரும் மே 23 முதல் ஜூன் 1 வரை நடக்கவுள்ளது. இந்தியா, மலேசியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் முதலில் ‘ரவுண்டு ராபின்’ முறையில் நடக்கும்.
முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் ‘சூப்பர்–4’ சுற்றுக்கு முன்னேறும். இதில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் முதல் இரு இடம் பெறும் அணிகள் ஜூன் 1ல் நடக்கும் பைனலில் விளையாடும்.
ஒரே பிரிவில்
இம்முறை இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், இந்தோனேஷியா அணிகள் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரில் தென் கொரியா, மலேசியா, ஓமன், வங்கதேச அணிகள் இடம் பிடித்தன.
மே 23ல் துவங்கும் முதல் போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்கவுள்ளது. அடுத்து ஜப்பான் (மே 24), இந்தோனேஷியா (மே 26) அணிகளுடன் மோத காத்திருக்கிறது.