உல்லன்பட்டார்: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தங்கம் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார் ரவிக்குமார்.
மங்கோலியாவில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் ரவிக்குமார், பஜ்ரங் புனியா உட்பட 30 பேர் பங்கேற்கின்றனர்.
நேற்று ஆண்களுக்கான ‘பிரீஸ்டைல்’ போட்டிகள் துவங்கின. 57 கிலோ பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா களமிறங்கினார். காலிறுதியில் ஜப்பானின் ரிகுட்டோவை 15–4 என வீழ்த்தினார். தொடர்ந்து அசத்திய இவர் அரையிறுதியில், 12–5 என மங்கோலியாவின் ஜதன்பத்தை வென்றார். பைனலில் ரவிக்குமார், கஜகஸ்தானின் கல்ஜான் மோதினர்.
இதில் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய ரவிக்குமார் 12–2 என வென்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இத்தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கம் இது.
தவிர, கடந்த 2020, 2021, 2022 என தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, தங்கப்பதக்கம் கைப்பற்றி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார் ரவிக்குமார்.
பஜ்ரங் ‘வெள்ளி’
65 கிலோ பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தியாவின் பஜ்ரங் புனியா பங்கேற்றார். காலிறுதியில் 3–0 என உஸ்பெகிஸ்தானின் அபோசை வென்றார். அரையிறுதியில் 3–1 என பஹ்ரைனின் ஹாஜி முகமதுவை வீழ்த்தினார். பைனலில் பஜ்ரங், ஈரானின் ரஹ்மானிடம் 1–3 என வீழ்ந்து, வெள்ளிப்பதக்கம் வென்றார்.
* 79 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் கவுரவ் பலியான், 10–0 என துர்க்மெனிஸ்தானின் குர்பன்ரத்தை வென்றார். அரையிறுதியில் 8–5 என கஜகஸ்தானின் ஆர்சலனை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். இதில் ஈரானின் அலி பக்தியாரிடம் (9–9) வீழ்ந்து வெள்ளி கைப்பற்றினார்.
* 70 கிலோ பிரிவு காலிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீரர் நவீன், வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் மங்கோலியாவின் டெம்முலனை 8–0 என வென்றார்.
* 97 கிலோ பிரிவு அரையிறுதியில் தோற்ற இந்தியாவின் சத்யவார்த், வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில், 10–0 என துர்க்மெனிஸ்தானின் சபரோவை வென்றார்.
இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் இந்திய அணி 1 தங்கம், 4 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்கள் வென்றுள்ளது.