நவி மும்பை: ‘‘போட்டியில் துணிச்சலான முடிவு எடுத்து அணியை சிறப்பாக வழிநடத்துகிறார் ஹர்திக் பாண்ட்யா,’’ என, ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
நவி மும்பையில் நடந்த ‘டி–20’ கிரிக்கெட் லீக் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி (192/4, 20 ஓவர்) 37 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை (155/9, 20 ஓவர்) வீழ்த்தியது. இப்போட்டியில் ‘ஆல்–ரவுண்டராக’ அசத்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (87* ரன், ஒரு விக்கெட்) ஆட்ட நாயகன் விருது வென்றார். குஜராத் அணி, இதுவரை விளையாடிய 5 போட்டியில், 4 வெற்றி, ஒரு தோல்வி என, 8 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.
ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன் செயல்பாடு குறித்து சகவீரர் ரஷித் கான் கூறுகையில், ‘‘ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்தும் விதம், களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் சகவீரர்களை கையாளும் விதம் வியக்க வைக்கிறது. போட்டியில் துணிச்சலாக முடிவு எடுக்கும் இவரது நம்பிக்கை சற்றும் குறையவில்லை. இதற்கு இவரது தெளிவான மனநிலை முக்கிய காரணம். இதனால் தான் போட்டியில் இக்கட்டான நேரத்தில் இவரால் சரியான முடிவு எடுக்க முடிகிறது. தவிர, பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறந்த வீரராகவும் வலம் வர முடிகிறது,’’ என்றார்.