Advertisement


மும்பையை வீழ்த்தியது கோல்கட்டா: வெங்கடேஷ், திரிபாதி விளாசல்

செப்டம்பர் 23, 2021 22:05
 Comments  
 


IPL 2021, T20 Cricket, Mumbai, Kolkata, Quinton De kock, Venkatesh Iyer, Rahul Tripathi
 

அபுதாபி: மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் வெங்கடேஷ், திரிபாதி அரைசதம் விளாச கோல்கட்டா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எமிரேட்சில், 14வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணி, இயான் மார்கன் வழிநடத்தும் கோல்கட்டா அணியை சந்தித்தது. கோல்கட்டா அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. சென்னைக்கு எதிராக விளையாடாத மும்பை கேப்டன் ரோகித் சர்மா அணிக்கு திரும்பினார். அன்மோல்பிரீத் சிங் நீக்கப்பட்டார். ஹர்திக் பாண்ட்யா மீண்டும் தேர்வாகவில்லை. ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா அணி கேப்டன் மார்கன், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

நல்ல துவக்கம்: மும்பை அணிக்கு குயின்டன் டி காக், கேப்டன் ரோகித் சர்மா ஜோடி நல்ல துவக்கம் தந்தது. நிதிஷ் ராணா வீசிய ஆட்டத்தின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி மும்பையின் ரன் கணக்கை துவக்கினார் ரோகித். தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி வீசிய 2வது ஓவரில் 4 ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. சுனில் நரைன் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரோகித், சக்ரவர்த்தி வீசிய 4வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்தார். பெர்குசன், பிரசித் கிருஷ்ணா பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்ட குயின்டன், ரசல் வீசிய 9வது ஓவரில் 2 பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 78 ரன் சேர்த்த போது நரைன் ‘சுழலில்’ ரோகித் (33) சிக்கினார்.

 

குயின்டன் அபாரம்: அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் (5), பிரசித் கிருஷ்ணா ‘வேகத்தில்’ வெளியேறினார். மறுமுனையில் பொறுப்பாக ஆடிய குயின்டன், ஐ.பி.எல்., அரங்கில் தனது 16வது அரைசதமடித்தார். இவர், 55 ரன் எடுத்திருந்த போது பிரசித் கிருஷ்ணாவிடம் சரணடைந்தார். ரசல் வீசிய 16வது ஓவரில் இஷான் கிஷான் ஒரு சிக்சர், போலார்டு ஒரு பவுண்டரி அடித்தனர். பெர்குசன் பந்தில் இஷான் கிஷான் (14) அவுட்டானார். பிரசித் கிருஷ்ணா வீசிய 18வது ஓவரில் போலார்டு, ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாச 18 ரன் கிடைத்தன. போலார்டு (21) ‘ரன்–அவுட்’ ஆனார். குர்னால் பாண்ட்யா (12) நிலைக்கவில்லை. பெர்குசன் வீசிய கடைசி பந்தை சவுரப் திவாரி பவுண்டரிக்கு அனுப்பினார்.

 

மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்தது. சவுரப் திவாரி (5), ஆடம் மில்னே (1) அவுட்டாகாமல் இருந்தனர். கோல்கட்டா சார்பில் பெர்குசன், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

வெங்கடேஷ் விளாசல்: சவாலான இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. பவுல்ட் வீசிய முதல் ஓவரில் சுப்மன், வெங்கடேஷ் தலா ஒரு சிக்சர் விளாசினர். ஆடம் மில்னே வீசிய 2வது ஓவரில் அசத்திய வெங்கடேஷ், ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 40 ரன் சேர்த்த போது பும்ரா ‘வேகத்தில்’ சுப்மன் (13) போல்டானார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி, பவுல்ட், மில்னே பந்தில் தலா ஒரு பவுண்டரி அடிக்க, ‘பவர்பிளே’ ஓவரில் கோல்கட்டா அணி 63 ரன் எடுத்தது.

 

திரிபாதி அசத்தல்: குர்னால் பாண்ட்யா பந்தில் ஒரு சிக்சர் பறக்கவிட்டார் வெங்கடேஷ். இவருக்கு ஒத்துழைப்பு தந்த திரிபாதி, ராகுல் சகார், குர்னால், பும்ரா பந்தில் தலா ஒரு பவுண்டரி விளாசினார். அபாரமாக ஆடிய வெங்கடேஷ், 25 பந்தில் அரைசதமடித்தார். பும்ரா பந்தை சிக்சருக்கு அனுப்பிய திரிபாதி, தன்பங்கிற்கு அரைசதமடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 88 ரன் சேர்த்த போது பும்ரா பந்தில் வெங்கடேஷ் (53) போல்டானார். தொடர்ந்து அசத்திய திரிபாதி, ராகுல் சகார் வீசிய 13வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். கேப்டன் மார்கன் (7) நிலைக்கவில்லை. ரோகித் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய நிதிஷ் ராணா வெற்றியை உறுதி செய்தார்.

 

கோல்கட்டா அணி 15.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 159 ரன் எடுத்து வெற்றி பெற்றது. திரிபாதி (74 ரன், 3 சிக்சர், 8 பவுண்டரி), ராணா (5) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை சார்பில் பும்ரா 3 விக்கெட் கைப்பற்றினார்.

 

 

1000 ரன்

மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, தனது 18வது ரன்னை கடந்த போது கோல்கட்டா அணிக்கு எதிராக 1000 ரன்களை எட்டினார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் எந்த ஒரு அணிக்கு எதிராக 1000 ரன்னை எட்டிய முதல் வீரரானார். அடுத்த மூன்று இடங்களில் டேவிட் வார்னர் (943 ரன், எதிர்: பஞ்சாப் மற்றும் 915 ரன், எதிர்: கோல்கட்டா), விராத் கோஹ்லி (909 ரன், எதிர்: டில்லி) உள்ளனர்.

 

தமிழ் பேச்சு

கோல்கட்டா அணியில் தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக், ‘சுழல்’ வீரர் வருண் சக்ரவர்த்தி உள்ளனர். சக்ரவர்த்தி, தனது 4வது ஓவரை வீசிய போது ‘கீப்பிங்’ செய்த கார்த்திக், ‘சூப்பர் டா டே’ என, தமிழில் பாராட்டினார்.

 

ஏழு முறை அவுட்

ஐ.பி.எல்., அரங்கில் சுனில் நரைன் ‘சுழலில்’ ரோகித் சர்மா 7வது முறையாக அவுட்டானார். ஏற்கனவே தோனி (எதிர் பவுலர்: ஜாகிர் கான்), விராத் கோஹ்லி (எதிர் பவுலர்: சந்தீப் சர்மா) இப்படி ஒரே பவுலரிடம் தலா 7 முறை தங்களது விக்கெட்டை பறிகொடுத்துள்ளனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?