Advertisement


டில்லி அணி கலக்கல் வெற்றி: தவான், ஸ்ரேயாஸ் அபாரம்

செப்டம்பர் 22, 2021 22:10
 Comments  
 


IPL 2021, T20 Cricket, Delhi, Hyderabad, Rabada, Rishabh Pant, Dhawan, Shreyas
 

துபாய்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த டில்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எமிரேட்சில், ஐ.பி.எல்., 14வது சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி, ரிஷாப் பன்ட் வழிநடத்தும் டில்லி அணியை சந்தித்தது. டில்லி அணியில் தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்ட ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பிடித்தார். ஐதராபாத் அணியில் ஹோல்டர், ரஷித் கான், வார்னர், வில்லியம்ஸ், டில்லி அணியில் நார்ட்ஜே, ரபாடா, ஸ்டாய்னிஸ், ஹெட்மயர் என, வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றனர். ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

 

வார்னர் ஏமாற்றம்: ஐதராபாத் அணிக்கு டேவிட் வார்னர், விரிதிமன் சகா ஜோடி துவக்கம் தந்தது. நார்ட்ஜே வீசிய முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இந்த ஓவரின் 3வது பந்தில் வார்னர் ‘டக்–அவுட்’ ஆனார். 

அவேஷ் கான், அக்சர் படேல் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த சகா, ரபாடா பந்தில் ஒரு சிக்சர் பறக்கவிட்டார். ஆனால் இம்மகிழ்ச்சி நிலைக்கவில்லை. ரபாடா ‘வேகத்தில்’ சகா (18) வெளியேறினார். 

அஷ்வின் வீசிய 9வது ஓவரில் வில்லியம்சன், மணிஷ் பாண்டே தலா ஒரு பவுண்டரி அடிக்க 15 ரன் கிடைத்தன. அக்சர் படேல் ‘சுழலில்’ வில்லியம்சன் (18) சிக்கினார். தொடர்ந்து அசத்திய ரபாடா பந்தில் மணிஷ் பாண்டே (17) சரணடைந்தார்.

 

சமத் ஆறுதல்: அடுத்து வந்த அப்துல் சமத், ரபாடா பந்தை பவுண்டரிக்கு விரட்டி தனது ரன் கணக்கை துவக்கினார். நார்ட்ஜே பந்தில் கேதர் ஜாதவ் (3) அவுட்டானார். பின் இணைந்த சமத், ஜேசன் ஹோல்டர் ஜோடி நிதானமாக விளையாடியது. 

ரபாடா பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஹோல்டர் (10), அக்சர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். அவேஷ் கான் பந்தில் சிக்சர் அடித்த சமத் (28) ஆறுதல் தந்தார். ரபாடா வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய ரஷித் கான் (22) ‘ரன்–அவுட்’ ஆனார். சந்தீப் சர்மா (0) ஏமாற்றினார்.

ஐதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 134 ரன் எடுத்தது. புவனேஷ்வர் குமார் (5) அவுட்டாகாமல் இருந்தார். டில்லி அணி சார்பில் ரபாடா 3, நார்ட்ஜே, அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

தவான் அபாரம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஜோடி துவக்கம் தந்தது. புவனேஷ்வர் குமார் வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் தவான். கலீல் அகமது வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய பிரித்வி (11), அதே ஓவரில் அவுட்டானார். ரஷித் கான் பந்தை சிக்சருக்கு அனுப்பிய தவான், சந்தீப் சர்மா வீசிய 10வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விளாசினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஸ்ரேயாஸ் ஐயர், ரஷித் கான் பந்தில் தன்பங்கிற்கு ஒரு சிக்சர் பறக்கவிட்டார். இரண்டாவது விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்த போது ரஷித் கான் ‘சுழலில்’ தவான் (42) சிக்கினார்.

சந்தீப் சர்மா வீசிய 14வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் ஸ்ரேயாஸ். புவனேஷ்வர் பந்தை சிக்சருக்கு அனுப்பிய கேப்டன் ரிஷாப் பன்ட், கலீல் அகமது வீசிய 17வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். ஹோல்டர் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஸ்ரேயாஸ் வெற்றியை உறுதி செய்தார்.

டில்லி அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 139 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் (47), ரிஷாப் பன்ட் (35) அவுட்டாகாமல் இருந்தனர். ஐதராபாத் சார்பில் கலீல் அகமது, ரஷித் கான் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

 

400 ரன்

ஷிகர் தவான், தனது 20வது ரன்னை கடந்த போது இந்த சீசனில் 400 ரன்னை எட்டிய முதல் வீரரானார். இதுவரை 9 போட்டியில், 3 அரைசதம் உட்பட 422 ரன் எடுத்துள்ளார். தவிர இவர், ஐ.பி.எல்., அரங்கில் தொடர்ச்சியாக 6 சீசனில் (2016ல் 501, 2017ல் 479, 2018ல் 497, 2019ல் 521, 2020ல் 618, 2021ல் 422* ரன்) 400 அல்லது அதற்கு மேல் ரன் எடுத்துள்ளார். ஏற்கனவே ரெய்னா (2008–14), வார்னர் (2013–20) தொடர்ச்சியாக தலா 7 சீசனில் இப்படி ரன் எடுத்திருந்தனர்.

 

ஐந்தாவது அணி

ஐதராபாத் அணி, இந்த சீசனில் பங்கேற்ற 8 போட்டியில், 7ல் தோல்வியடைந்தது. இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் ஒரு சீசனில் களமிறங்கிய முதல் 8 போட்டியில், 7ல் தோல்வியடைந்த 5வது அணியானது. ஏற்கனவே கோல்கட்டா (2009), பஞ்சாப் (2010), டில்லி (2013), பெங்களூரு (2019) இப்படி தோல்வியை தழுவின.

 

 

2016க்கு பின்...

பேட்டிங்கில் ஏமாற்றிய ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர், 2016க்கு பின் ஐ.பி.எல்., அரங்கில் ‘டக்–அவுட்’ ஆனார்.

 

ஸ்டாய்னிஸ் காயம்

ஆட்டத்தின் 9வது ஓவரை வீசிய டில்லி அணியின் மார்கஸ் ஸ்டாய்னிசிற்கு, காலின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் ஒரு பந்து மட்டும் வீசிய நிலையில் ‘பிஸியோதெரபிஸ்ட்’ பாட்ரிக் பர்ஹார்த்துடன் ‘பெவிலியன்’ திரும்பினார். மீதமுள்ள 5 பந்துகளை அஷ்வின் வீசினார். இவருக்கு மாற்றாக ஸ்டீவ் ஸ்மித் ‘பீல்டிங்’ செய்தார். ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இவர், காயமடைந்திருப்பது பின்னடைவு. ஸ்டாய்னிஸ், 1.1 ஓவரில் 8 ரன் வழங்கி, ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?