Advertisement


சரிப்பட்டு வருமா இரட்டை தலைமை: பதவி விலகுகிறார் கோஹ்லி

செப்டம்பர் 16, 2021 20:51
 Comments  
 


I have decided to step down as T 20 captain after ICC Men T 20 World Cup, Virat Kohli
 

புதுடில்லி: உலக கோப்பை தொடருக்குப் பின் ‘டுவென்டி–20’ கேப்டன் பதவியில் இருந்து கோஹ்லி விலகுகிறார். டெஸ்ட், ஒருநாள் அணிக்கு கேப்டனாக தொடர்வார்.

இந்திய கிரிக்கெட்டின் மூன்று வித அணி கேப்டன் கோஹ்லி 32. இவர் 65 டெஸ்ட் (38 வெற்றி), 95 ஒருநாள் (65 வெற்றி), 45 ‘டுவென்டி–20’ (27 வெற்றி) போட்டிகளில் கேப்டனாக களமிறங்கியுள்ளார். கடந்த 2019 க்குப் பின் சர்வதேச அரங்கில் பேட்டிங்கில் தடுமாறி வரும் இவர், ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 

‘வரும் அக். 17–நவ. 14ல் எமிரேட்சில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்குப் பின், பணிச்சுமையை குறைக்கும் வகையில் கேப்டன் பதவியில் இருந்து கோஹ்லி விலகுகிறார். ரோகித் புதிய கேப்டன் ஆவார்,’ என செய்திகள் வெளியாகின. இதை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மறுத்தது. 

தற்போது இந்த செய்தி உண்மையாகி உள்ளது. ‘டுவென்டி–20’ அணி கேப்டன் பதவியில் இருந்து கோஹ்லி விலகுகிறார். இதுகுறித்து தனது ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் கோஹ்லி வெளியிட்ட கடிதம்:

இந்திய அணி வீரராக மட்டுமன்றி கேப்டனாகவும் களமிறங்கியது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் தான். இவ்விஷயத்தில் ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. சக வீரர்கள், பயிற்சியாளர்கள், தேர்வாளர்களுடன், ஒவ்வொரு போட்டியிலும் எங்களின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்த அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி. இவர்கள் இல்லை என்றால் என்னால் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியாது.

பணிச் சுமை

கடந்த 8–9 ஆண்டுகளாக தொடர்ந்து மூன்று வித கிரிக்கெட்டிலும் பங்கேற்று வருகிறேன். கடந்த 5–6 ஆண்டுகளாக கேப்டனாகவும் உள்ளேன். பணிச்சுமை அதிகமாக உள்ளது. டெஸ்ட், ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக, முழு அளவில் தயாராகும் வகையில் எனக்கு சற்று இடைவெளி தேவைப்படுகிறது என நினைக்கிறேன். தவிர ‘டுவென்டி–20’ கேப்டனாக இருக்கும் வரை அணியின் வெற்றிக்காக அனைத்தையும் செய்யத் தயாராக உள்ளேன். அணியில் ஒரு வீரராக மட்டும் தொடர உள்ளேன்.

எளிதானது அல்ல

இம்முடிவை எளிதாக எடுத்துவிடவில்லை, நீண்ட யோசனைக்குப் பிறகு தான் இம்முடிவுக்கு வந்தேன். இதுகுறித்து எனக்கு நெருக்கமானவர்கள், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சக வீரர் ரோகித் சர்மாவுடன் விவாதித்த பிறகு, துபாயில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்குப் பின் ‘டுவென்டி–20’ அணி கேப்டன் பதவியில் இருந்து விலக  முடிவு செய்துள்ளேன். பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி, செயலர் ஜெய் ஷா, தேர்வுக்குழுவினரிடம் இதுகுறித்து தெரிவித்து விட்டேன். இந்திய கிரிக்கெட், இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பான முறையில் திறமை வெளிப்படுத்துவேன். 

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

‘டுவென்டி–20’ அணிக்கு புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்படலாம். இதையடுத்து 

கோஹ்லி, ரோகித் என இரண்டு கேப்டன்கள் இருப்பது இந்திய அணிக்கு சரிப்பட்டு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தவிர, ரோகித் சர்மாவுக்கு 34 வயதான நிலையில், ரிஷாப் பன்ட் போன்ற இளம் வீரரை கேப்டனாக தேர்வு செய்யலாம். 

 

எதிர்கால நலனுக்காக...

பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி கூறுகையில்,‘‘இந்திய கிரிக்கெட்டின் உண்மையான சொத்து கோஹ்லி. மூன்று வித போட்டிகளிலும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர். எதிர்கால நலனை முன்னிட்டு இந்த முடிவை எடுத்திருக்கலாம். ‘டுவென்டி–20’ கேப்டனாக வியக்கத்தக்க முறையில் செயல்பட்ட அவருக்கு நன்றி. வரும் உலக கோப்பை தொடர் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்,’’ என்றார். 

 

வெற்றியுடன்...

இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறுகையில்,‘‘உலக ‘டுவென்டி–20’ தொடரில் கோஹ்லி வெற்றியுடன் விடைபெற திட்டமிட்டுள்ளார். பதவி விலகல் அறிவிப்பால் எவ்வித நெருக்கடியும் இன்றி தொடரில் பங்கேற்கலாம். இது இந்திய அணிக்கு உதவியாக இருக்கும்,’’ என்றார்.

 

அன்னிய மண்ணில்...

தென் ஆப்ரிக்கா (2–1, 2018), இங்கிலாந்து (2–1, 2018), நியூசிலாந்து (5–0, 2020), ஆஸ்திரேலியா (2–1, 2020) மண்ணில் ‘டுவென்டி–20’ கோப்பை வென்ற ஒரே ஆசிய கேப்டன் கோஹ்லி. 

* தவிர இலங்கை (1–0, 2017), அயர்லாந்து (2–0, 2018), விண்டீஸ் மண்ணிலும் (3–0, 2019) என கோப்பை வென்று அசத்தினார். 

 

ரோகித் கேப்டனா

இந்திய ‘டுவென்டி–20’ அணி கேப்டனாக ரோகித் சர்மா 34, நியமிக்கப்படலாம். ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணிக்காக 5 கோப்பை வென்றார். இந்திய அணிக்காக 19 ‘டுவென்டி–20’ போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு, 15ல் வெற்றி பெற்றுத் தந்தார். 4ல் தோல்வி கிடைத்தது.

* அதேநேரம் ரோகித்துக்குப் பதில் துணிச்சலாக செயல்படும் இளம் வீரருக்கு கேப்டன் பதவி கொடுத்து, தோனி ஆலோசனையில் புதிய அணியை உருவாக்க பி.சி.சி.ஐ., திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது. 

 

முதல் முறையா

இந்திய அணிக்கு ஏற்கனவே கும்ளே (டெஸ்ட்), டிராவிட் (ஒருநாள்) என இரண்டு கேப்டன்கள் இருந்துள்ளனர். அப்போது ஐ.சி.சி., தொடரில் பெரியளவு சாதிக்கவில்லை. தோனியின் ஒற்றைத் தலைமையின் கீழ் அணி வந்த பின், 2007 (‘டுவென்டி–20’), 2011ல் (50 ஓவர்) உலக கோப்பையை வென்றது. 2013ல் சாம்பியன்ஸ் டிராபி கைப்பற்றியது. டெஸ்ட் அரங்கில் இந்தியா ‘நம்பர்–1’ ஆனது. 

* கோஹ்லி தலைமையில் ஐ.சி.சி., தொடரில் சாதிக்காத போதும், மற்ற போட்டிகளில் வாகை சூடியது. 

* சர்வதேச அரங்கில் ஆஸ்திரேலியாவுக்கு பின்ச் (‘டுவென்டி–20’, ஒருநாள்), டிம் பெய்ன் (டெஸ்ட்), இங்கிலாந்திற்கு மார்கன் ((‘டுவென்டி–20’, ஒருநாள்), ஜோ ரூட் (டெஸ்ட்), தென் ஆப்ரிக்காவுக்கு பவுமா, எல்கர், நியூசிலாந்துக்கு வில்லியம்சன், டாம் லதாம், விண்டீசில் போலார்டு, பிராத்வைட் என இரண்டு கேப்டன்கள் உள்ளனர். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?