Advertisement


இத்தாலி கனவு பலித்தது * ‘யூரோ’ கோப்பை வென்றது

ஜூலை 12, 2021 09:40
 Comments  
 


Euro cup championship, italy VS England, Champion
 

லண்டன்: யூரோ கால்பந்து கோப்பை தட்டிச் சென்றது இத்தாலி. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. லண்டன் வெம்ளேமைதானத்தில் நடந்த பைனலில், இங்கிலாந்து அணி தனது சொந்தமண்ணில், இத்தாலியை சந்தித்தது.

அதிவேக கோல்

போட்டி துவங்கிய 1 நிமிடம் 56 வது வினாடியில் பின்கள வீரர் டிரிப்பியர் பந்தை இத்தாலி கோல் பகுதியில் அடித்தார். அங்கிருந்த லுாக் ஷா அதை அப்படியே கோலாக மாற்றினார்.யூரோ பைனல் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிவேக கோல் என்ற பெருமை இதற்கு கிடைத்தது. முதல் பாதியில் இங்கிலாந்து 1–0 என முன்னிலை பெற்றது.

பொனுாச்சி அபாரம்

இரண்டாவது பாதியில் இங்கிலாந்து கோல் ஏரியாவுக்குள் புகுந்த இத்தாலி வீரர் வெர்ராட்டி அடித்த பந்து கோல் போஸ்டில் பட்டுத் திரும்பியது. உடனடியாக சுதாரித்த பொனுாச்சி (67 வது நிமிடம்), மீண்டும் திருப்பி அடித்து வலைக்குள் தள்ள, ஒட்டுமொத்த மைதானமும் ‘ஷாக்’ ஆனது. யூரோ பைனலில் அதிக வயதில் கோல் அடித்த வீரர் ஆனார் பொனுாச்சி (34 வயது, 71 நாள்). முடிவில் போட்டி 1–1 என சமன் ஆனது.

கூடுதல் நேரம்

ஆட்டம் கூடுதல் நேரத்துக்குசென்றது.30 நிமிட போராட்டத்துக்குப் பின் இரு அணியினரும் கோல் எதுவும் அடிக்காமல் போக 1–1 என சமனில் நீடித்தது. வெற்றியாளரை முடிவு செய்ய ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறைக்கு பின்பற்றப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஐந்து வாய்ப்புகள் தரப்பட்டன.

கியான்லுகி கலக்கல்

* முதல் வாய்ப்பில் பெரார்டி (இத்தாலி), ஹாரி கேன் (இங்கிலாந்து) கோல் அடித்தனர் (1–1).

* இரண்டாவது வாய்ப்பில் பெலோட்டி(இத்தாலி) அடித்த பந்தை, இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்போர்டு தடுத்தார். மறுபக்கம் மாகுயர்ரே கோல் அடிக்க, இங்கிலாந்து அணி 2–1 என முந்தியது.

* அடுத்து பொனுாச்சி (இத்தாலி) கோல் அடிக்க, ராஷ்போர்டு அடித்த பந்து, கோல் போஸ்டில் பட்டுத் திரும்பியது. ஸ்கோர் 2–2 என சமன் ஆனது.

* நான்காவது வாய்ப்பில் பெர்னார்டுதேச்சி (இத்தாலி) கோல் அடிக்க, சான்சோ (இங்கிலாந்து) அடித்த பந்தை இத்தாலி கோல் கீப்பர் கியான்லுகி தடுத்தார். இம்முறை இத்தாலி 3–2 என முந்தியது.

* ஐந்தாவது வாய்ப்பில் கோல் அடித்தால் வெற்றி என்ற நிலையில் வந்தார் இத்தாலியின் ஜோரினோ. ஆனால் இவர் அடித்த பந்தை, பிக்போர்டு தடுக்க இங்கிலாந்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இது சில நிமிடம் கூட நீடிக்கவில்லை. அடுத்து வந்த இங்கிலாந்தின் சகா அடித்த பந்தை, கியான்லுகி தடுத்தார். முடிவில் இத்தாலி 3–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இத்தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது.

 

1

யூரோ தொடர் அரையிறுதியில் இத்தாலி அணி ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் 4–2 என ஸ்பெயினை வென்றது. நேற்று நடந்த பைனலில் இங்கிலாந்தையும் இதே முறையில் 3–2 என சாய்த்தது. இதையடுத்து யூரோ அரங்கில் ஒரு தொடரில் இரு முறை ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ வென்ற முதல் அணியானது இத்தாலி.

 

4

ஜெர்மனி (3), ஸ்பெயின் (3), பிரான்ஸ் (2) அணிகளுக்குப் பின் யூரோ கோப்பையை இரண்டு அல்லது அதற்கும் மேல் என வென்ற நான்காவது அணியானது இத்தாலி (1968, 2021).

 

7

முக்கிய தொடர்களில் இங்கிலாந்து அணி ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ தோற்றது நேற்று ஏழாவது முறையாக (1990, 1996, 1998, 2004, 2006, 2012, 2021) நடந்தது. இதுபோன்ற 10 போட்டிகளில் இங்கிலாந்து 3ல் தான் வென்றது. 

* யூரோ தொடரின் பைனல் ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது, நேற்று 7 வது முறையாக நடந்தது. 

 

15

இத்தாலி அணி சர்வதேச அரங்கில் 2006ல் ஜெர்மனியில் நடந்த உலக கோப்பை தொடரில் கோப்பை வென்றது. தற்போது 15 ஆண்டுக்குப் பின் மீண்டும் சர்வதேச தொடரில் (யூரோ) சாதித்துள்ளது.

 

34

சர்வதேச அரங்கில் இத்தாலி அணி தொடர்ந்து 34 போட்டிகளில் தோற்காமல் (28 வெற்றி, 6 ‘டிரா’) வலம் வருகிறது. கடைசியாக 2018ல் போர்ச்சுகலிடம் வீழ்ந்தது. 

 

53

யூரோ தொடரில் 53 ஆண்டுக்குப் பின் மீண்டும் கோப்பை வென்றது இத்தாலி. இதற்கு முன் 1968 ல் சொந்தமண்ணில் சாதித்து இருந்தது. 

 

ரூ. 103 கோடி 

யூரோ கோப்பை வென்ற இத்தாலி அணிக்கு ரூ. 103 கோடி பரிசாக கிடைத்தது. தோல்வியடைந்த இங்கிலாந்து அணிக்கு ரூ. 72.48 கோடி தரப்பட்டது. 

 

1977

கடந்த 1977க்குப் பின் இத்தாலி அணியை இங்கிலாந்து இதுவரை வென்றதில்லை. இந்த சோகம் நேற்றும் (4 தோல்வி, ‘டிரா’) தொடர்ந்தது. 

 

சொந்தமண் சோகம்

யூரோ தொடரில் ஸ்பெயின் (1964), இத்தாலி (1968), பிரான்ஸ் (1984) அணிகள் சொந்தமண்ணில் சாதித்து கோப்பை வென்றன. இதன் பின் தொடரை நடத்திய அணி கோப்பை வென்றது இல்லை. இம்முறை ஐரோப்பாவின் 11 நகரங்களில் போட்டி நடந்தன. பைனல் இங்கிலாந்தில் நடந்தது. இத்தாலி கோப்பை வென்றது. 

 

தொடர் நாயகன்

இங்கிலாந்துக்கு எதிரான பைனலில் ஆட்டநாயகனாக இத்தாலியின் பொனுாச்சி தேர்வு செய்யப்பட்டார். இத்தாலி கோல் கீப்பர் கியான்லுகி தொடர் நாயகன் ஆனார்.


ரொனால்டோ ‘நம்பர்–1’

யூரோ தொடரில் போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ, 5 கோல் அடித்து, ஒரு கோல் அடிக்க சக வீரருக்கு உதவினார். இத்தொடரின் அதிக கோல் அடித்த வீரர்களில் ‘நம்பர்–1’ இடம் பெற்றார். செக் குடியரசிவ் ஷிசிக் (5 கோல்) அடுத்த இடம் பிடித்தார்.

* ஸ்பெயினின் பெட்ரி, இத்தொடரின் சிறந்த இளம் வீரர் ஆனார். இவர் 629 நிமிடம் விளையாடி, 76.1 கி.மீ., துாரம் ஓடினார். பந்தை ‘பாஸ்’ செய்தது 92.3% துல்லியமாக இருந்தது.


இனவெறி சர்ச்சை: பிரதமர் கண்டனம்

பைனலில் நடந்த ‘பெனால்டி ஷூட் அவுட்’ கடைசி வாய்ப்பை, நைஜீரிய வம்சாவளியை சேர்ந்த, 19 வயது வீரர் புகாயோ சகா வீணடிக்க, இங்கிலாந்தின் கோப்பை கனவு தகர்ந்தது. இதையடுத்து, ‘எனது தேசத்தை விட்டு வெளியேறு’, ‘நைஜீரியாவுக்கு போ,’ என இனவெறியை துாண்டும் வார்த்தைகள், எமோஜிக்களை இங்கிலாந்து ரசிகர்கள், இவருக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர். 

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘நமது அணியினர் பாராட்டுக்குரியவர்கள். அவர்கள் கொண்டாடப்பட வேண்டும். இனவெறி கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது. இப்படி பேசியவர்கள் வெட்கப்பட வேண்டும்,’ என்றார். 


கொண்டாட்டம்

யூரோ கோப்பை தொடர் வெற்றியை இத்தாலி ரசிகர்கள் வாணவேடிக்கை, இரவு முழுவதும் கொண்டாடினர். கொரோனா பாதிப்பில் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலிக்கு (1,27,000 பேர் பலி) இந்த வெற்றி பெரும் உற்சாகத்தை கொடுத்தது. 15 ஆண்டுக்குப் பின் சர்வதேச அரங்கில் சாதித்த இத்தாலி அணியினர் நேற்று நாடு திரும்பினர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வீரர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.


ரசிகர்கள் மீது தாக்குதல்

பைனல் பார்க்க டிக்கெட் இல்லாத ரசிகர்கள் மைதானத்தில் நுழைய முற்பட்டனர். இதில் ஏற்பட்ட அடிதடியில் 19 போலீசார் காயமடைந்தனர். 49 பேர் கைது செய்யப்பட்டனர். 

* போட்டி முடிந்து வெம்ளே மைதானத்தில் இருந்து வெளியே வந்த இத்தாலி ரசிகர்கள் மீது, இங்கிலாந்து ரசிகர்கள் தாக்குதல் நடத்தினர். லண்டன் தெருக்களில் பல இடங்களில் இத்தாலி ரசிகர்கள் தாக்கப்பட்டனர். இத்தாலியின் தேசியக் கொடியையும் அவமானம் செய்தனர். இதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் பீட்டர்சன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 


மைதானத்தில் புகுந்த ரசிகர்

போட்டியின் 87 வது நிமிடம் ரசிகர்கள் ஒருவர் மைதானத்தில் புகுந்தார். இதனால் போட்டி நிறுத்தப்பட்டது. பின் பாதுகாவலர்கள் அவரை வெளியேற்றியதும் பைனல் தொடர்ந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?