Advertisement


சென்னைக்கு ‘பொல்லாதவன்’ போலார்டு: கடைசி பந்தில் மும்பை வெற்றி

மே 01, 2021 22:46
 Comments  
 


IPL 2021, T20 Cricket, Chennai, Mumbai, Pollard
 

புதுடில்லி: சென்னைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் போலார்டின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி பந்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.

இந்தியாவில், 14வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணிகள் மோதின. மும்பை அணியில் நாதன் கூல்டர் நைல், ஜெயந்த் யாதவ் நீக்கப்பட்டு ஜேம்ஸ் நீஷம், தவால் குல்கர்னி தேர்வாகினர். சென்னை அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

மொயீன் அசத்தல்: சென்னை அணிக்கு ருதுராஜ், டுபிளசி ஜோடி துவக்கம் தந்தது. டிரண்ட் பவுல்ட் வீசிய முதல் ஓவரின் 2வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ருதுராஜ் (4), 4வது பந்தில் அவுட்டானார். தவால் குல்கர்னி வீசிய 2வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார் டுபிளசி. பவுல்ட் வீசிய 3வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய மொயீன் அலி, பும்ரா, நீஷம், ராகுல் சகார் பந்துகளை சிக்சருக்கு அனுப்பினார். அபாரமாக ஆடிய மொயீன், 33 பந்தில் அரைசதம் எட்டினார். தொடர்ந்து அசத்திய இவர், நீஷம் வீசிய 10வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விரட்டினார்.

டுபிளசி அபாரம்: மறுமுனையில் அசத்திய டுபிளசி, பும்ரா வீசிய 11வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 108 ரன் சேர்த்த போது பும்ரா ‘வேகத்தில்’ மொயீன் (58 ரன், 5 சிக்சர், 5 பவுண்டரி) வெளியேறினார். அபாரமாக ஆடிய டுபிளசி, இந்த சீசனில் தொடர்ந்து 4வது அரைசதத்தை பதிவு செய்தார். இந்நிலையில் 12வது ஓவரை வீசிய போலார்டு இரட்டை ‘அடி’ தந்தார். இந்த ஓவரின் 5வது பந்தில் டுபிளசியை (50) அவுட்டாக்கிய இவர், கடைசி பந்தில் ரெய்னாவை (2) ‘பெவிலியனுக்கு’ அனுப்பினார்.

ராயுடு விளாசல்: அடுத்து வந்த அம்பதி ராயுடு சிக்சர் மழை பொழிந்தார். குல்கர்னி, பும்ரா வீசிய 16, 17வது ஓவரில் தொடர்ச்சியாக தலா 2 சிக்சர் பறக்கவிட்ட இவர், பவுல்ட் வீசிய 18வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து 20 பந்தில் அரைசதமடித்தார். பும்ரா பந்தை ஜடேஜா பவுண்டரிக்கு அனுப்ப சென்னை அணி 200 ரன்னை கடந்தது. தொடர்ந்து அசத்திய ராயுடு, குல்கர்னி வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார்.

சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 218 ரன் குவித்தது. ராயுடு (72 ரன், 7 சிக்சர், 4 பவுண்டரி), ஜடேஜா (22) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை சார்பில் போலார்டு 2 விக்கெட் வீழ்த்தினார்.

போலார்டு கலக்கல்: கடின இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு குயின்டன் டி காக் (38), கேப்டன் ரோகித் சர்மா (35) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. சூர்யகுமார் யாதவ் (3) ஏமாற்றினார். சென்னை அணிக்கு ‘பொல்லாதவனாக’ மாறிய போலார்டு சிக்சர் மழை பொழிந்தார். ஜடேஜா வீசிய 13வது ஓவரில் 3 சிக்சர் விளாசிய போலார்டு, ஷர்துல் தாகூர் வீசிய 15வது ஓவரில் ஒரு சிக்சர், 3 பவுண்டரி அடித்து 17 பந்தில் அரைசதமடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த குர்னால் பாண்ட்யா, லுங்கிடி வீசிய 16வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். நான்காவது விக்கெட்டுக்கு 89 ரன் சேர்த்த போது சாம் கர்ரான் பந்தில் குர்னால் (32) அவுட்டானார்.

சாம் கர்ரான் வீசிய 19வது ஓவரில் 2 சிக்சர் விளாசிய ஹர்திக் பாண்ட்யா (16) நிலைக்கவில்லை. நீஷம் (0) ஏமாற்றினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டன. லுங்கிடி வீசிய 20வது ஓவரின் முதல் 5 பந்தில் அசத்திய போலார்டு 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். கடைசி பந்தில் 2 ரன் எடுத்த இவர், வெற்றியை உறுதி செய்தார்.

மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 219 ரன் எடுத்து வெற்றி பெற்றது. போலார்டு (87 ரன், 8 சிக்சர், 6 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார்.

 

350 போட்டி

சென்னைக்கு எதிராக களமிறங்கிய மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, ஒட்டுமொத்த ‘டுவென்டி–20’ அரங்கில் தனது 350வது போட்டியில் விளையாடினார். இதன்மூலம் இம்மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரரானார். அடுத்த இரு இடங்களில் தோனி (338 போட்டி), ரெய்னா (330) உள்ளனர்.

 

50 ‘கேட்ச்’

சென்னையின் ருதுராஜ் அடித்த பந்தை பிடித்த ஹர்திக் பாண்ட்யா, ஐ.பி.எல்., அரங்கில் மும்பை அணிக்காக 50 ‘கேட்ச்’ செய்த 3வது வீரரானார். முதலிரண்டு இடங்களில் போலார்டு (92 ‘கேட்ச்’), ரோகித் (67) உள்ளனர்.

 

20 பந்து

அபாரமாக ஆடிய அம்பதி ராயுடு, 20 பந்தில் அரைசதமடித்தார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் குறைந்த பந்தில் அரைசதம் எட்டிய சென்னை வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை தோனியுடன் (20 பந்து, எதிர்: மும்பை, 2012, இடம்: பெங்களூரு) பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் ரெய்னா (16 பந்து, எதிர்: பஞ்சாப், 2014, இடம்: மும்பை) உள்ளார்.

 

56 ரன்

மும்பையின் பும்ரா, அதிகபட்சமாக 56 ரன் விட்டுக் கொடுத்தார். இதற்கு முன் இவர், 2015ல் டில்லி அணிக்கு எதிராக 55 ரன் வழங்கி இருந்தார்.

 

218 ரன்

அபாரமாக ஆடிய சென்னை அணி, ஐ.பி.எல்., அரங்கில் மும்பைக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரை (218) பதிவு செய்தது. இதற்கு முன் 2008ல் சென்னையில் நடந்த போட்டியில் 208 ரன் எடுத்திருந்தது மும்பைக்கு எதிராக சென்னையின் சிறந்த ஸ்கோராக இருந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?