பம்போலிம்: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் மும்பை அணி முதன் முறையாக பைனலுக்கு முன்னேறியது.
இந்தியாவில் ஐ.எஸ்.எல்., தொடரின் ஏழாவது சீசன் நடக்கிறது. இதில் மும்பை–கோவா (2–2), கோல்கட்டா–வடகிழக்கு (1–1) அணிகள் மோதிய அரையிறுதி முதல் சுற்று ‘டிரா’ ஆகின. நேற்று இரண்டாவது சுற்று அரையிறுதியில் மும்பை, கோவா மீண்டும் மோதின. 90 நிமிடங்கள் நடந்த ஆட்ட முடிவில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை.
போட்டி கூடுதல் நேரத்துக்கு (தலா 15 நிமிடம்) சென்றது. இதிலும் இரு அணியும் கோல் அடிக்கவில்லை. வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. இதில் தலா 2 கோல் மட்டும் அடிக்க, ஸ்கோர் 2–2 என சமன் ஆனது.
பின் ஆட்டம் ‘சடன் டெத்’ முறைக்கு சென்றது. இதில் எதிரணி கோல் வாய்ப்பை தடுத்து, பின் கோல் அடித்து முன்னிலை பெறும் அணி வெற்றி பெறும். இரு அணிகளும் அடுத்தடுத்து முதல் 3 முறை கோல் அடித்தன. அடுத்த வாய்ப்பை கோவா வீணடித்தது. இம்முறை போர்கஸ் கோல் அடிக்க மும்பை அணி 6–5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதன் முறையாக பைனலுக்கு முன்னேறியது.