ஆமதாபாத்: இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முதற்கட்ட கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க, முழுவீச்சில் தடுப்பூசி போடும் பணிகள் தற்போது நடக்கின்றன. தற்போது நாடு முழுதும் உள்ள, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 'கார்மாபிடைட்டிஸ்' எனப்படும், இரண்டுக்கும் மேற்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடும் பணி நடக்கிறது.
இதனிடையே ஆமதாபாத்தில் இந்திய அணி வீரர்களுடன் உள்ள பயிற்சியாளர், முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி 58, நேற்று முதல்கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில்,‘கொரோனா தடுப்பூசியின் முதல் ‘டோஸ்’ போட்டுக் கொண்டேன். தொற்று நோய்க்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு இந்தியா தேசியக் கொடியை வெற்றிகரமாக பறக்கச் செய்ய மருத்துவ வல்லுனர்கள், விஞ்ஞானிகளுக்கு நன்றி,’ என தெரிவித்துள்ளார்.