புதுடில்லி: சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் இந்திய அணி, ஓமன், யு.ஏ.இ., அணிகளுடன் விளையாடுகிறது.
கத்தார் தலைநகர் தோகாவில், வரும் 2022ல் ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. ஆசிய அணிகள் பங்கேற்கும் தகுதிச் சுற்றுக்கான 2வது சுற்றில் இந்திய அணி, ‘இ’ பிரிவில் கத்தார், ஓமன், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. இதுவரை விளையாடிய 5 போட்டியில், 3 ‘டிரா’, 2 தோல்வி என, 3 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
மீதமுள்ள 3 போட்டிகளில் கத்தார் (ஜூன் 3), வங்கதேசம் (ஜூன் 11), ஆப்கானிஸ்தான் (ஜூன் 15) அணிகளுடன் மோதவுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக துபாய் செல்லவுள்ள இந்திய அணி, ஓமன் (மார்ச் 25), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (மார்ச் 29) அணிகளுக்கு எதிராக நட்பு ரீதியிலான சர்வதேச போட்டியில் பங்கேற்கிறது. இப்போட்டிகளுக்கு தயாராக இந்திய அணியினர் வரும் மார்ச் 15 முதல், துபாயில் பயிற்சி முகாமில் பங்கேற்கின்றனர்.
கடைசியாக இந்திய அணி, 2019, மார்ச் 19ல் மஸ்கட்டில் நடந்த ஓமன் அணிக்கு எதிரான உலக கோப்பை (2022) தகுதிச் சுற்றில் விளையாடியது. அதன்பின் கொரோனா பரவல் காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.