தாகா: ‘‘இலங்கை தொடருக்கு தேர்வு செய்தால், ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகத் தயார்,’’ என, முஸ்தபிஜுர் தெரிவித்துள்ளார்.
இலங்கை செல்லவுள்ள வங்கதேச அணி (ஏப்ரல்–மே), டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் பங்கேற்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. இக்காலகட்டத்தில் இந்தியாவில் 14வது ஐ.பி.எல்., சீசன் நடக்கும். இதில் கோல்கட்டா அணி சார்பில் பங்கேற்க ‘ஆல்–ரவுண்டர்’ சாகிப் அல் ஹசன், வங்கதேச கிரிக்கெட் போர்டிடம் அனுமதி பெற்றுவிட்டார். இதேபோல, ராஜஸ்தான் அணியில் ரூ. ஒரு கோடிக்கு ஒப்பந்தமான வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து முஸ்தபிஜுர் கூறுகையில், ‘‘நான் எப்போதும் தேசிய அணிக்காக விளையாட முன்னுரிமை அளிப்பேன். எனவே இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு என்னை தேர்வு செய்தால், ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகுவேன். ஒருவேளை தேசிய அணியில் இடம் கிடைக்காவிட்டால், வங்கதேச கிரிக்கெட் போர்டின் அனுமதி பெற்று ஐ.பி.எல்., சீசனில் ராஜஸ்தானுக்காக விளையாடுவேன்,’’ என்றார்.