புதுடில்லி: ‘‘ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணிக்காக விளையாட இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது,’’ என, ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் 31. ஐ.பி.எல்., அரங்கில் இதுவரை 95 போட்டியில், 2333 ரன்கள் எடுத்துள்ள இவர், 2017 சீசனில் புனே அணிக்காக 15 போட்டியில், 472 ரன்கள் குவித்தார். கடந்த 2018ல் நடந்த வீரர்கள் ஏலத்தில் ராஜஸ்தான் அணியில் ரூ. 12.5 கோடிக்கு ஒப்பந்தமானார். கடந்த சீசனில் இவரது தலைமையிலான ராஜஸ்தான் அணி கடைசி இடம் பிடித்தது. இதனால் இவர், விடுவிக்கப்பட்டார். சமீபத்தில் சென்னையில் நடந்த வீரர்கள் ஏலத்தில் ரூ. 2.20 கோடிக்கு டில்லி அணியில் ஒப்பந்தமானார். இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் உள்ளார். கடந்த சீசனில் டில்லி அணி பைனல் வரை சென்றிருந்தது.
இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், ‘‘டில்லி அணியில் இணைய இருப்பது உற்சாகம் அளிக்கிறது. இந்த அணியில் திறமையான வீரர்கள், அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் இருப்பதால், என்றும் மறக்க முடியாத நல்ல நினைவுகளை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு கைகொடுக்க முயற்சிப்பேன். இத்தொடரில் பங்கேற்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்,’’ என்றார்.