பெங்களூரு: விஜய் ஹசாரே டிராபியில் பங்கேற்ற பீஹார் வீரருக்கு ‘கொரோனா’ உறுதியானது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ‘லிஸ்ட் ஏ’ தொடரான விஜய் ஹசாரே டிராபி (50 ஓவர்) நடத்தப்படுகிறது. பெங்களூருவில் நடக்கும் ‘சி’ பிரிவு லீக் சுற்றில் ரயில்வே, கேரளா, கர்நாடகா, பீஹார், ஒடிசா, உ.பி., அணிகள் விளையாடுகின்றன. ரயில்வே, கர்நாடகா அணிகளிடம் வீழ்ந்த பீஹார் அணி, இன்று உ.பி., அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் பீஹார் வீரர் ஒருவருக்கு ‘கொரோனா’ தொற்று உறுதியானது. அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மற்றவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என, பீஹார் கிரிக்கெட் சங்கம் சார்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடக்கும் ‘டி’ பிரிவு லீக் சுற்றில் பங்கேற்கும் மஹாராஷ்டிரா, ஹிமாச்சல பிரதேசம் அணிகளை சேர்ந்த தலா ஒரு வீரருக்கு ‘கொரோனா’ உறுதியானது. கொரோனா பாதிக்கப்பட்ட வீரர்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு போட்டிகள் நடந்தன.
ஸ்ரேயாஸ் சதம்
ஜெய்ப்பூரில் நடந்த ‘டி’ பிரிவு லீக் போட்டியில் மும்பை, மஹாராஷ்டிரா அணிகள் மோதின. மஹாராஷ்டிரா அணி, 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்தது. எட்டக்கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (103*) கைகொடுக்க 47.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.