புதுடில்லி: ‘‘லஞ்சம் கேட்டு தொல்லை தந்த ஏர் இந்தியா பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என மனுபாகர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய துப்பாக்கிசுடுதல் வீராங்கனை மனு பாகர் 19. காமன்வெல்த், யூத் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர். டில்லியில் இருந்து போபாலுக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்றார்.
அப்போது நடந்த சம்பவம் குறித்து மனு பாகர் கூறியது:
துப்பாக்கி, தோட்டாக்கள் கொண்டு செல்ல உள்நாட்டு விமான போக்குவரத்து பொது இயக்குநரிடம் அனுமதி சான்றிதழ் பெற்றுள்ளேன். இதில், கையெழுத்து, சீல் இல்லை என கூறி ‘ஏர் இந்தியா’ அதிகாரி மனோஜ் குப்தா பிரச்னை கிளப்பினார். 2021, ஜன. 1 முதல் எலக்ட்ரானிக் முறை வந்து விட்டது. இது அங்கிருந்த அதிகாரிகளுக்கு தெரியவில்லை. 2 துப்பாக்கிக்கு ரூ. 10,200 லஞ்சம் கேட்டனர்.
நான் துப்பாக்கிசுடுதல் வீராங்கனை. இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் விளையாட உள்ளேன் என்றேன். இதனை யாரும் ஏற்கவில்லை.
அலைபேசி பறிப்பு
சம்பவத்தை படம் பிடித்த என் அம்மாவிடம் இருந்த அலைபேசியை, பாதுகாவலர் ஒருவர் பறித்து, போட்டோக்களை அழித்தார். என்னை ‘கிரிமினல்’ போல நடத்தினார். விளையாட்டு வீராங்கனை என்ற அடிப்படையில் குறைந்தபட்ச மரியாதை கொடுத்திருக்கலாம். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மன்னிப்பு
ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘எங்கள் அதிகாரிகள் தேவையான சான்றிதழ்களைத் கேட்டனர். நீங்கள் சொல்வது போல லஞ்சம் கேட்கவில்லை. உங்கள் பயணத்தின் போது ஏற்பட்ட சிரமங்களுக்கு மன்னிப்பு,’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்சம் கொடுக்கவா
‘சரியான சான்றுகள் இருந்தும், விமானத்தில் செல்ல அனுமதி மறுக்கின்றனர். அவர்கள் கேட்கும் லஞ்சத்தை கொடுக்கவா,’ என பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு ‘டுவிட்டர்’ அனுப்பினார் மனு பாகர். கிரண் ரிஜிஜு தலையிட்ட பிறகு தான் பயணம் செய்ய அனுமதி கிடைத்தது.