மும்பை: ‘‘அர்ஜுன் மீது வீசப்படும் ‘வாரிசு’ என்ற வார்த்தை மிகவும் கொடுமையானது,’’ என, பாலிவுட் நடிகர் பர்ஹான் அக்தர் தெரிவித்துள்ளார்.
இந்திய ஜாம்பவான் சச்சின் மகன் அர்ஜுன் 21. இடது கை வேகப்பந்துவீச்சாளரான இவர், சமீபத்தில் முடிந்த சையது முஷ்தாக் அலி டிராபியில் மும்பை அணியில் அறிமுகமானார். சென்னையில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் அடிப்படை தொகையான ரூ. 20 லட்சத்திற்கு மும்பை அணியில் அர்ஜுன் ஒப்பந்தமானார். சச்சினின் மகன் என்பதால் இவர், வாரிசு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார் என சமூகவலைதளங்களில் விவாதம் எழுந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலிவுட் நடிகர் பர்ஹான் அக்தர், தனது ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில், ‘‘அர்ஜுன் பற்றி நான் சொல்லியாக வேண்டும். ஏனெனில் நாங்கள் இருவரும் ஒரே ‘ஜிம்மில்’ உடற்பயிற்சி செய்கிறோம். உடற்தகுதிக்காக கடுமையாக உழைக்கும் அர்ஜுன், சிறந்த கிரிக்கெட் வீரராக மாறுவதற்கு கூடுதல் கவனம் செலுத்துகிறார். அவர் மீது வாரிசு என்ற வார்த்தை வீசப்படுவது மிகவும் கொடுமையானது, நியாயமற்றது. அவரது ஆர்வத்தை கொன்று, கிரிக்கெட் வாழ்க்கையை துவக்குவதற்கு முன்பே அவரை கீழே தள்ளிவிட வேண்டாம்,’’ என, தெரிவித்திருந்தார்.