இந்துார்: மத்திய பிரதேச அணிக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில் ஜார்க்கண்ட் வீரர் இஷான் கிஷான், 73 பந்தில் 173 ரன்கள் விளாசினார்.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. நேற்று இந்துாரில் நடந்த ‘பி’ பிரிவு போட்டியில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக ‘டாஸ்’ வென்ற மத்திய பிரதேச அணி பீல்டிங் தேர்வு செய்தது.
இஷான் அபாரம்
முதலில் களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி இஷான் கிஷான், உட்கர்ஷ் (6) ஜோடி துவக்கம் கொடுத்தது. பவுண்டரி (19), சிக்சர் (11) மழை பொழிந்த இஷான் கிஷான், 74 பந்தில் 173 ரன்கள் குவித்து அவுட்டானார். விராத் சிங் (68), அன்குல் ராய் (72) கைகொடுக்க ஜார்க்கண்ட் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 422 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய மத்திய பிரதேச அணி 98 ரன்னுக்கு சுருண்டு, 324 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
ஜெகதீசன் சதம்
மற்றொரு போட்டியில் தமிழகம், பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 50 ஓவரில் 288/4 ரன்கள் எடுத்தது. கடின இலக்கைத் துரத்திய தமிழக அணிக்கு துவக்கவீரர் ஜெகதீசன் (101) சதம் அடித்து கைகொடுத்தார். பாபா அபராஜித் 88 ரன் எடுத்த, கேப்டன் தினேஷ் கார்த்திக் (19) ஏமாற்றினார்.
கடைசி நேரத்தில் கைகொடுத்த ஷாருக்கான், 36 பந்தில் 55 ரன்கள் எடுக்க, தமிழக அணி 49 ஓவரில் 289/4 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
324
ஜார்க்கண்ட் அணி நேற்று 324 ரன்னில் வெற்றி பெற்றது. ‘லிஸ்ட் ஏ’ போட்டிகளில் அதிக ரன் வித்தியாசத்தில் வென்ற வரிசையில், இரண்டாவது இடத்தை கிளவ்ஸ்செஸ்டர்சயர் (324, 2003, எதிர்–பக்கிங்ஹாம்) அணியுடன் பகிர்ந்து கொண்டது. முதல் இடத்தில் சாமர்செட் (346 ரன், 1990, எதிர்–தேவான்) அணி உள்ளது.
422
விஜய் ஹசாரே தொடரில் அதிகபட்ச ஸ்கோரை ஜார்க்கண்ட் அணி பதிவு செய்தது. நேற்று 50 ஓவரில் 422/9 ரன்கள் எடுத்தது. இதற்கு முன் 2010ல் மத்திய பிரதேச அணி 412/6 ரன்கள் (எதிர்–ரயில்வே) எடுத்தது தான் அதிகம்.