பம்போலிம்: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் இன்று சென்னை, கேரளா அணிகள் மோதுகின்றன. இதில் சென்னை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 7வது சீசன் கோவாவில் நடக்கிறது. இன்று பம்போலிம் நகரில் நடக்கவுள்ள லீக் போட்டியில் 2 முறை கோப்பை வென்ற சென்னை அணி, கேரளாவை சந்திக்கிறது. ஐ.எஸ்.எல்., கால்பந்து அரங்கில் இவ்விரு அணிகள் மோதிய 15 போட்டிகளில் சென்னை 6, கேரளா 3ல் வென்றன. ஆறு போட்டிகள் ‘டிரா’ ஆனது. இம்முறை இவ்விரு அணிகள் மோதிய போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது.
இதுவரை விளையாடிய 19 போட்டியில், 3 வெற்றி, 10 ‘டிரா’, 6 தோல்வி என, 19 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ள சென்னை அணி ஏற்கனவே ‘பிளே–ஆப்’ வாய்ப்பை இழந்தது. இன்று தனது கடைசி லீக் போட்டியில் களமிறங்கும் சென்னை அணி, வெற்றியுடன் விடை பெற முயற்சிக்கலாம். கடைசியாக பங்கேற்ற 8 போட்டிகளில், 5 ‘டிரா’, 3 தோல்வியை பெற்றது. இம்முறை 19 போட்டியில், 16 கோல் மட்டுமே அடித்துள்ள சென்னை அணி, 10 போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்காதது பின்னடைவு. வடகிழக்கு அணிக்கு எதிராக ஒரு கட்டத்தில் 3–2 என, முன்னிலை வகித்திருந்த சென்னை அணி, கடைசி நேர சொதப்பல் காரணமாக ‘டிரா’ செய்ய நேரிட்டது. கடந்த போட்டிகளில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டால் தொடரை வெற்றியுடன் முடிக்கலாம்.
இதுவரை பங்கேற்ற 18 போட்டியில், 3 வெற்றி, 7 ‘டிரா’, 8 தோல்வி என, 16 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ள கேரளா அணி ஏற்கனவே ‘பிளே–ஆப்’ வாய்ப்பை கோட்டைவிட்டது. மீதமுள்ள 2 போட்டிகளில் ஆறுதல் வெற்றி பெற கேரளா அணி முயற்சிக்கலாம்.