மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியை தோற்கடித்தார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடப்பு ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்–3’ ஜப்பானின் நவோமி ஒசாகா, 24வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஜெனிபர் பிராடி மோதினர். முதல் செட்டை 6–4 எனக் கைப்பற்றிய ஒசாகா, 2வது செட்டை 6–3 என தன்வசப்படுத்தினார்.
ஒரு மணி நேரம், 17 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஒசாகா 6–4, 6–3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றார். இதன்மூலம் ஒசாகா, ஆஸ்திரேலிய ஓபனில் தனது 2வது பட்டத்தை கைப்பற்றினார். ஏற்கனவே 2019ல் கோப்பை வென்றிருந்தார். தவிர இது, இவரது 4வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். இவர், யு.எஸ்., ஓபனிலும் 2 முறை (2018, 2020) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.
ரூ. 15.5 கோடி பரிசு
ஆஸ்திரேலிய ஓபனில் கோப்பை வென்ற ஜப்பான் வீராங்கனை ஒசாகா, கோப்பையுடன் ரூ. 15.5 கோடி பரிசுத் தொகை வென்றார். பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்த அமெரிக்காவின் ஜெனிபர் பிராடிக்கு, ரூ. 8.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
சாதிப்பாரா ஜோகோவிச்
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கவுள்ள பைனலில் உலகின் ‘நம்பர்–1’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 4வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் டேனில் மெட்வெடேவ் மோதுகின்றனர். இதில் ‘நடப்பு சாம்பியன்’ ஜோகோவிச் வெற்றி பெறும் பட்சத்தில் ஆஸ்திரேலிய ஓபனில் 9வது பட்டத்தையும், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 18வது கோப்பையையும் கைப்பற்றலாம். தொடர்ச்சியாக 20 போட்டிகளில் வெற்றி நடை போடும் மெட்வெடேவ் வென்றால், தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ருசிக்கலாம்.
செக்குடியரசு–அமெரிக்க ஜோடி சாம்பியன்
கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் செக்குடியரசின் பார்போரா கிரெஜிகோவா, அமெரிக்காவின் ராஜிவ் ராம் ஜோடி 6–1, 6–4 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர், மாத்யூ எப்டன் ஜோடியை வீழ்த்தி கோப்பை வென்றது.