மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ஸ்பெயினின் நடால், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடப்பு ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் ‘நம்பர்–2’ ஸ்பெயினின் ரபெல் நடால், 6வது இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் மோதினர். முதலிரண்டு செட்களை 6–3, 6–2 எனக் கைப்பற்றிய நடால், ‘டை பிரேக்கர்’ வரை சென்ற 3வது செட்டை 6–7 எனக் கோட்டைவிட்டார். நான்காவது செட்டில் மீண்டும் அசத்திய சிட்சிபாஸ், 6–4 என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டில் ஏமாற்றிய நடால் 5–7 என இழந்தார். நான்கு மணி நேரம், 5 நிமிடம் நீடித்த போட்டியில் நடால் 6–3, 6–2, 6–7, 4–6, 5–7 என, தோல்வியடைந்து வெளியேறினார். இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையரில் அதிக பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை முந்தி முதலிடம் பிடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இவர்கள் இருவரும் தலா 20 பட்டம் வென்றுள்ளனர். சிட்சிபாஸ், அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் உலகின் ‘நம்பர்–4’ ரஷ்யாவின் டேனில் மெட்வெடேவ் 7–5, 6–3, 6–2 என்ற நேர் செட் கணக்கில் 8வது இடத்தில் உள்ள சகவீரர் ஆன்ட்ரி ருப்லெவ்வை தோற்கடித்தார்.
பார்டி ஏமாற்றம்: பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, செக்குடியரசின் கரோலினா முசோவா மோதினர். இதில் ஏமாற்றிய உலகின் ‘நம்பர்–1’ ஆஷ்லே பார்டி 6–1, 3–6, 2–6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடி 4–6, 6–2, 6–1 என, சகவீராங்கனை ஜெசிகா பெகுலாவை வீழ்த்தினார்.