மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு ஜோகோவிச் முன்னேறினார். பெண்கள் ஒற்றையரில் செரினா, ஒசாகா காலிறுதியில் வெற்றி பெற்றனர்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது. நேற்று காலிறுதி போட்டிகள் நடந்தன. ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் உலகின் ‘நம்பர்–1’ இடத்திலுள்ள செர்பியாவின் ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவரேவை எதிர்கொண்டார். ‘டை பிரேக்கர்’ வரை நீடித்த முதல் செட்டை ஜிவரேவ் 7–6 என வென்றார். பின் சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச், அடுத்த மூன்று செட்களையும் 6–2, 6–4, 7–6 என கைப்பற்றினார். முடிவில் ஜோகோவிச், 6–7, 6–2, 6–4, 7–6 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு காலிறுதியில் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் அறிமுகம் ஆன ரஷ்யாவின் கரட்சேவ், பல்கேரியாவின் டிமிட்ரோவை, 2–6, 6–4, 6–1, 6–2 என்ற செட்கணக்கில் வீழ்த்தி, முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.
செரினா வெற்றி
அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ், ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பை சந்தித்தார். முதல் செட்டை செரினா 6–3 என கைப்பற்றினார். அடுத்த செட்டில் ஹாலெப், 3–1 என முன்னிலை பெற்றார். பின் சுதாரித்துக் கொண்ட செரினா, 6–3 என செட்டை கைப்பற்றினார். முடிவில் செரினா 6–3, 6–3 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஒசாகா அபாரம்
உலகத் தரவரிசையில் ‘நம்பர்–3’ இடத்திலுள்ள ஜப்பான் வீராங்கனை ஒசாகா, தைவானின் சு–வெய்யை சந்தித்தார். முதல் செட்டை 6–2 என எளிதாக கைப்பற்றினார் ஒசாகா. அடுத்த செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய இவர், 6–2 என வசப்படுத்தினார். முடிவில் ஒசாகா 6–2, 6–2 என வெற்றி பெற்றார். நாளை நடக்கும் அரையிறுதியில் செரினா, ஒசாகா பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.