சென்னை: சென்னை டெஸ்ட் முதல் நாளில் இந்திய பவுலிங் ஏமாற்றமாக அமைந்து. பேட்டிங்கில் அசத்தினார் ஜோ ரூட், தனது டெஸ்டில் சதம் அடித்து மிரட்டினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் வலுவான இலக்கை நோக்கி முன்னேறுகிறது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று துவங்கியது. முதல் இரு நாட்களில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், ‘டாஸ்’ வென்று இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், எதிர்பார்த்தபடியே பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி ஐந்து பவுலர்களுடன் களமிறங்கியது. அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மாவுடன், ஷாபாஸ் நதீம் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பினார். சிப்லே அபாரம்இங்கிலாந்து அணிக்கு பர்ன்ஸ், சிப்லே ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. அஷ்வின், நதீம் வீசிய முதல் ஓவர்களில் சிப்லே பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்த போது, அஷ்வின் பந்தை ‘சுவீப் ஷாட்’ அடிக்க முயற்சித்த பர்ன்ஸ் (33), பன்ட்டிடம் ‘கேட்ச்’ கொடுத்தார். அடுத்த வந்த லாரன்சை, பும்ரா ‘டக்’ அவுட்டாக்கினார். இது சொந்தமண்ணில் பும்ரா வீழ்த்திய முதல் டெஸ்ட் விக்கெட்டாக அமைந்தது.சிப்லேயுடன் இணைந்தார் ஜோ ரூட். இருவரும் இந்திய பந்து வீச்சை எளிதாக சமாளித்தனர். ஆடுகளம் கொஞ்சம் கூட பவுலர்களுக்கு கைகொடுக்கவில்லை. வாய்ப்பை பயன்படுத்திய சிப்லே டெஸ்ட் அரங்கில் 4வது அரைசதம் எட்டினார். ஜோ ரூட் சதம்அஷ்வின் வீசிய போட்டியின் 55வது ஓவரில் ஜோ ரூட், அடுத்தடுத்து இரு பவுண்டரிகள் அடித்தார். தொடர்ந்து ஷாபாஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஜோ ரூட், வேகமாக ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். தனது 100 வது டெஸ்டில் பேட்டிங்கில் அசத்திய ஜோ ரூட், சதம் அடித்தார். சமீபத்தில் இலங்கைக்கு எதிராக 228, 186 ரன்கள் எடுத்த ஜோ ரூட், ஆசிய மண்ணில் ‘ஹாட்ரிக்’ சதத்தை பதிவு செய்தார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்த நிலையில், பும்ரா வீசிய நேற்றைய கடைசி ஓவரில் சிப்லே (87) அவுட்டானார். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 263 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் (128) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் பும்ரா 2, அஷ்வின் விக்கெட் வீழ்த்தினர்.
3
கடந்த 2010 க்குப் பின் சென்னை மண்ணில் நடந்த டெஸ்டில் அரைசதம் அடித்த எதிரணியின் மூன்றாவது துவக்க வீரர் ஆனார் இங்கிலாந்தின் சிப்லே (87). இதற்கு முன் 2013ல் வார்னர் (59, ஆஸி.,), 2016ல் ஜென்னிங்ஸ் (54, இங்கிலாந்து) அரைசதம் அடித்தனர்.
7
ஜோ ரூட் இந்திய மண்ணில் நேற்று தனது 7 வது டெஸ்டில் பங்கேற்றார். இதற்கு முன் விளையாடிய 6 டெஸ்டிலும் ஏதாவது ஒரு இன்னிங்சில் குறைந்தது அரைசதம் அடித்தார். நேற்றும் 7 வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 128 ரன்கள் எடுத்தார். தவிர இந்தியாவுக்கு எதிராக
17
டெஸ்ட் அரங்கில் அன்னிய மண்ணில் அறிமுகம் ஆகி, நீண்ட இடைவெளிக்குப் பின் (1127 நாள், 79 விக்., 17 டெஸ்ட்) சொந்தமண்ணில் முதல் டெஸ்டில் களமிறங்கினார் இந்தியாவின் பும்ரா. இதற்கு முன் ஸ்ரீநாத் 12, ஆர்.பி.சிங் 11, சச்சின் 10, ஆஷிஸ் நெஹ்ரா 10 டெஸ்டில் விளையாடிய பின், இந்திய மண்ணில் முதல் டெஸ்டில் பங்கேற்றனர்.
* சர்வதேச அளவில் விண்டீசின் டேரன் கங்கா 17, இங்கிலாந்தின் பில்லி பேட்ஸ் 15 டெஸ்டுக்குப் பின், சொந்தமண்ணில் முதல் டெஸ்ட் விளையாடினர்.
20
தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களில் அதிக சதம் அடித்தவர்களில் ஜோ ரூட், 5வது இடம் பிடித்தார். இவர் 20 சதம் அடித்தார். முதல் 4 இடங்களில் ஸ்மித் (27, ஆஸி.,), கோஹ்லி (27, இந்தியா), வில்லியம்சன் (24, நியூசி.,), வார்னர் (24, ஆஸி.,) உள்ளனர். ராஸ் டெய்லர் (19, நியூசி.,) 6வது இடத்தில் உள்ளார்.
1, 50, 100
இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட். 2012 நாக்பூர் டெஸ்டில் அறிமுகம் ஆனார். விசாகப்பட்டினத்தில் 50வது டெஸ்டில் (2018) பங்கேற்றார். நேற்று தனது 100வது டெஸ்டில் களமிறங்கினார். 1, 50, 100 என மூன்று முக்கிய டெஸ்டும் இந்திய அணிக்கு எதிராக என்பது ஸ்பெஷல் தான். தவிர இம் மைல்கல்லை எட்டிய 15வது இங்கிலாந்து வீரர் ஆனார்.
* 1, 50, 100 வது டெஸ்டில் 50 ரன்னுக்கும் மேல் அடித்த 7 வது வீரர் ஆனார் ஜோ ரூட். இதற்கு முன் கிரீனிட்ஜ் (விண்டீஸ்), டிராவிட், லட்சுமண் (இந்தியா), மியாண்தத் (பாக்.,), ஸ்மித் (தெ.ஆப்.,), அலெஸ்டர் குக் (இங்கிலாந்து) இதுபோல ரன்கள் எடுத்தனர்.
2017 க்குப் பின்...
கடந்த 2017 ராஞ்சி டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் வார்னர்–ரென்ஷா ஜோடி 50 ரன்னுக்கும் மேல் சேர்த்தது. இதன் பின் நடந்த 12 டெஸ்டில் எதிரணியின் 24 துவக்க ஜோடிகள் இணைந்து 249 ரன்கள் மட்டும் எடுத்தன. 3 ஆண்டுக்குப் பின் முதன் முறையாக இங்கிலாந்தின் பர்ன்ஸ், சிப்லே ஜோடி, துவக்க விக்கெட்டுக்கு 50 ரன்னுக்கும் மேல் சேர்த்தது.
அக்சர் படேல் விலகல்
இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்கும் அணியில் இடம் பெற்றிருந்தார். சென்னையில் துவங்கிய முதல் டெஸ்டில் இடம் பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் முதல் நாள் பயிற்சியில் அக்சர் இடது முழங்காலில் வலி ஏற்பட்டது.
வேறு வழியில்லாத நிலையில் சென்னை டெஸ்டில் இருந்து விலகினார். இவருக்குப் பதில் ஷாபாஸ் நதீம், ராகுல் சகார் முதல் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டனர். இதில் ஷாபாஸ் நதீம் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றார். இவர் ஏற்கனவே 2019 ல் ராஞ்சி டெஸ்டில் (தெ.ஆப்.,) விளையாடினார்.
50
டெஸ்ட் அரங்கில் முதல் 100 போட்டியில் அதிகமுறை 50 ரன்னுக்கும் மேல் எடுத்த வீரர்களில் கவாஸ்கரை முந்தினார் இங்கிலாந்தின் ஜோ ரூட். இவர் 19 சதம், 50 அரைசதம் அடித்துள்ளார். இந்தியாவின் கவாஸ்கர், விண்டீசின் லாரா தங்களது முதல் 100 டெஸ்டில் 66, 65 முறை, 50 ரன்னுக்கும் மேல் எடுத்தனர்.
* இங்கிலாந்து அணிக்காக அதிக முறை 50 ரன்னுக்கும் மேல் எடுத்த வீரர்களில் இயான் பெல்லை (68) முந்தி இரண்டாவது இடம் பெற்றார் ஜோ ரூட் (69). இதில் அலெஸ்டர் குக் (90) முதலிடத்தில் உள்ளார்.
100 க்கு 100
டெஸ்ட் அரங்கில் தனது 100 வது டெஸ்டில் சதம் அடித்த 9வது வீரர் ஆனார் இங்கிலாந்தின் ஜோ ரூட். இதற்கு முன் கோலின் காவ்ட்ரே (104, 1968, இங்கிலாந்து), மியாண்தத் (145, 1989, பாக்.,), கிரீனிட்ஜ் (149, 1990, விண்டீஸ்), ஸ்டீவர்ட் (105, 2000, இங்கிலாந்து), இன்சமாம் உல் ஹக் (184, 2005, பாக்.,), ரிக்கி பாண்ட்டிங் (120, 143, 2006, ஆஸி.,) ஸ்மித் (131, 2012, தெ.ஆப்.,), ஆம்லா (134, 2017, தெ.ஆப்.,) தங்களது 100 வது டெஸ்டில் 100 ரன்னுக்கும் மேல் எடுத்தனர்.