மெல்போர்ன்: ‘‘வலுவான கட்டமைப்பை கொண்டு இந்திய கிரிக்கெட் போர்டினால் (பி.சி.சி.ஐ.,) ஒரே நேரத்தில் ஐந்து இந்திய அணிகளைக் கூட ஏற்படுத்த முடியும்,’’ என கிரெக் சாப்பல் தெரிவித்தார்.ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. கோஹ்லி, பும்ரா, முகமது ஷமி, அஷ்வின், ஜடேஜா என சீனியர்கள் 10 பேர் அணியில் இல்லாத நிலையிலும் அறிமுக வாய்ப்பு பெற்ற ‘ஜூனியர்கள்’ அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்த, தொடரை கைப்பற்றியது இந்தியா. இந்த வெற்றி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர், இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் கிரெக் சாப்பல் 72,கூறியது:
இந்திய இளம் வீரர்களுடன் ஒப்பிடும் போது, நமது இளம் வீரர்கள், பலவீனமான போர் வீரர்களாகத் தான் உள்ளனர். 16 வயதுக்குட்பட்ட அணியினர் போல திகழ்கின்றனர். இந்திய வீரர்கள் தேசிய அணிக்கு வரும் போது பல்வேறு பிரிவுகளில் திறமையாக செயல்பட்டு, கிடைக்கும் வாய்ப்பில் தங்களை நிரூபித்து, அணியை வெற்றி பெறச் செய்யும் திறனுடன் வருகின்றனர்.
அச்சம் உள்ளது
உண்மையில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளை ஒப்பிட்டு பேசுவதற்கே எனக்கு அச்சமாக உள்ளது. புகோவ்ஸ்கி, கேமரான் கிரீன் அனுபவங்கள் ‘பிரைமரி’ பள்ளி அளவில் தான் உள்ளது. எலக்ட்ரிக் கார்கள் இயங்கும் கால கட்டத்தில், 1960களில் இருந்த ‘ ேஹால்டன்’ ரக கார்களை வைத்துக் கொண்டு ஓட்ட முடியாது என்பதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு (சி.ஏ.,) புரிந்து கொள்ள வேண்டும்.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) இளம் வீரர்களுக்காக ஆயிரக்கணக்கான கோடிகள் பணம் செலவு செய்கிறது. ெஷபீல்டு தொடருக்காக ஆஸ்திரேலியா ரூ. 248 கோடி செலவு செய்கிறது, அவ்வளவு தான். இரண்டையும் ஒப்பிட்டால் சிறிய அளவு அல்ல, இந்திய பெருங்கடல் அளவுக்கு வித்தியாசம் இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த நிர்வாகமும் இதை தெரிந்து கொள்ளவில்லை என்றால் தொடர்ந்து தோற்றுக் கொண்டு தான் இருப்போம்.
இந்திய இளம் அணியின் திறமைகளை, நமது முதல் தர அணிகளுடன் ஒப்பிடும் போது அவமானமாக உள்ளது. கடுமையான போட்டிகளில் நெருக்கடிகளை சமாளித்து மீண்டு வரும் திறனுடன் வளர்கின்றனர். இதுபோன்ற தீவிரத்தை வலைப்பயிற்சி அல்லது சாதாரண அணிகளுக்கு எதிராக நாம் கொண்டு வர முடியாது. இந்தியாவிடம் 38 முதல் தர அணிகள் உள்ளன என்றால், அவர்களது திறமைகள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்திய இளம் மற்றும் ‘ஏ’ அணி விளையாடுவதை பாருங்கள், கிரிக்கெட்டை எப்படி புரிந்து கொண்டுள்ளனர் என தெரியும். இந்தியா சிறந்த அணியாக மாறுவது குறித்து கவலைப்பட வேண்டாம். ஏனெனில் உலக கிரிக்கெட்டில் ஒரே நேரத்தில் ஐந்து அணியை உருவாக்கும் திறமை அவர்களுக்கு உள்ளது. நான்கு டெஸ்டிலும் தொடர்ந்து நான்கு பவுலர்களை மட்டும் பயன்படுத்தியது தான் நாம் செய்த பெரிய தவறு .
இவ்வாறு அவர் கூறினார்.
வார்னர், ஸ்மித் வேண்டாம்
கிரெக் சாப்பல் கூறுகையில்,‘‘திறமை அடிப்படையில் தேர்வாகும் ஐந்து வீரர்களில் பெய்னும் ஒருவர். தோல்விக்கு இவரை குற்றம் சொல்ல வேண்டாம். பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் கூட ரன் சேர்க்கும் திறன் இல்லாத பேட்ஸ்மேன்கள் தான் தோல்விக்கு காரணம். வார்னர், ஸ்டீவ் ஸ்மித் தடுமாறுகின்றனர். இவர்களுக்கு மாற்றாக புதிய சாம்பியன் வீரர்களை விரைவில் கண்டறிய வேண்டும்,’’ என்றார்.