பிரிஸ்பேன்: ‘‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வென்ற இந்திய வீரர்களை உலகமே வாழ்த்துகிறது,’’ என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டி முடிவில் தொடர் 1–1 என சமனில் இருந்தது. நான்காவது டெஸ்ட் பிரிஸ்பேனில் நடந்தது. இதில் எழுச்சி பெற்ற இந்திய அணி சாதனை வெற்றி பெற்றது.
33 ஆண்டுகளில் பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய முதல் அணி என்ற பெருமை பெற்றது. தொடரை 2–1 என கைப்பற்றி, ‘பார்டர்–கவாஸ்கர்’ கோப்பையை தக்க வைத்தது.இந்த வெற்றி பயணத்தில் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு முக்கிய பங்கு உண்டு.
முன்னணி பவுலர்கள் காயம் அடைந்த நிலையில் டெஸ்ட் அனுபவம் இல்லாத நடராஜன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ் போன்ற வீரர்களை சிறப்பாக தயார் செய்தார். இதன் பலனாக ஆஸ்திரேலிய மண்ணில் வரலாறு படைத்தது இந்தியா. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ‘நம்பர்–1’ பிடித்தது. இந்திய வீரர்களை நினைத்து இந்த நாடே பெருமை கொள்கிறது.
பிரிஸ்பேன் வெற்றிக்கு பின் ‘டிரசிங் ரூமில்’இந்திய வீரர்களிடம் ரவி சாஸ்திரி பேசியது:டெஸ்ட் தொடரில் துணிச்சலாக செயல்பட்டீர்கள். விளையாட்டு உணர்வுடன், தீர்க்கமாக செயல்பட்ட விதம், உண்மையில் நம்பவே முடியவில்லை. முதல் டெஸ்டில் 36 ரன்னுக்கு ஆல் அவுட்டானது, அடுத்தடுத்து காயங்கள் ஏற்பட்டது என எதையும் கண்டு கொள்ளாமல் தன்னம்பிக்கையுடன் சாதித்தீர்கள்.
இவை எல்லாம் ஒருநாள் இரவில் நிகழ்ந்துவிடவில்லை. ஒரு அணியாக இணைந்து கிரிக்கெட்டை முன் எடுத்துச் சென்றுள்ளீர்கள். இன்று இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் எழுந்து நின்று உங்களுக்கு ‘சல்யூட்’ செய்கிறது. வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கிறது. இந்த தருணத்தை கொண்டாடி மகிழுங்கள்.
இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.
விசில் பறந்தன
பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, வீரர்களை பாராட்டி பேசிய போது, வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் விசிலடித்து மகிழ்ந்தனர்.
‘ஹார்ட் அட்டாக்’ பயம்
வெற்றிக்கு கைகொடுத்த வீரர்கள் அனைவரையும் பாராட்டினார் ரவி சாஸ்திரி. வீரர்களை பார்த்து அவர் கூறுகையில்,‘‘சுப்மன் ‘கிரேட், கிரேட்’. புஜாரா, நீங்கள் எப்போதும் சிறந்த வீரர் என எல்லோருக்கும் தெரியும், ரிஷாப், அசத்தலாக செயல்பட்டீர்கள். நீங்கள் பேட்டிங் செய்ததை பார்த்த சிலருக்கு ‘ஹார்ட் அட்டாக்’ ஏற்பட வாய்ப்பு இருந்தது. நல்லவேளையாக வெற்றியுடன் முடித்து தந்தீர்கள். கேப்டன் ரகானே அணியை சிறப்பாக வழி நடத்தினீர்கள், பின் தங்கிய நிலையில் இருந்த இந்திய அணியை எழுச்சி பெறச் செய்து, வெற்றிகரமான நிலைக்கு கொண்டு வந்து விட்டார்,’’ என்றார்.
‘நட்டு... வாஷி’
ரவி சாஸ்திரி கூறுகையில்,‘‘பிரிஸ்பேன் டெஸ்ட் முதல் இன்னிங்சில் அறிமுக வீரர்கள் நட்டு (நடராஜன்), வாஷி (வாஷிங்டன் சுந்தர்), தவிர ஷர்துல் தாகூர் இணைந்து ஆஸ்திரேலிய அணியின் முதுகெலும்பை தகர்த்து விட்டீர்கள். இதனால் தான் 186/6 என இருந்து, 336 ரன்கள் எடுக்க முடிந்தது,’’ என்றார்.