பம்போலிம்: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் சென்னை, ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதிய லீக் போட்டி, கோல் எதுமின்றி ‘டிரா’ ஆனது.
இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்தின் ஏழாவது சீசன் தற்போது நடக்கிறது. கோவாவின் பம்போலிம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் இரு முறை சாம்பியன் ஆன சென்னை அணி (6வது இடம்), புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் இருந்த ஈஸ்ட் பெங்காலை சந்தித்தது. 18 வது நிமிடம் சக வீரர் இஸ்மாயில் கொடுத்த பந்தை பெற்ற ஜெர்ரி, கோலாக்க முயன்றார். பந்து கோல் போஸ்ட் இடது பக்கமாக சென்றது.
23வது நிமிடம் எல் சபியா கொடுத்த பந்தை தலையால் முட்டி கோலாக்க முயன்ற சிபோவிச் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. 43வது நிமிடம் சென்னை வீரர் எல் சபியா எடுத்த முயற்சி வீணாக, முதல் பாதி கோல் எதுவுமின்றி (0–0) முடிந்தது.
இரண்டாவது பாதியில் சென்னை அணி வீரர்கள் அடுத்தடுத்து தாக்குதல் தொடுத்தனர். 55 வது நிமிடம் இஸ்மாயில், ஜெர்ரி 57வது நிமிடம் எட்வின் அடித்த பந்துகள் வீணாகின. 65வது நிமிடத்தில் சென்னையின் சாங்டே அடித்த பந்தை கோல் கீப்பர் தடுத்தார்.
தொடர்ந்து சென்னை வீரர்கள் எடுத்த எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. முடிவில் சென்னை, ஈஸ்ட் பெங்கால் மோதிய போட்டி கோல் இல்லாமல் (0–0) ‘டிரா’ ஆனது. சென்னை அணி 13 போட்டியில் தலா 3 வெற்றி, 3 தோல்வியடைந்தது. 7 போட்டியை ‘டிரா’ செய்தது.