புதுடில்லி: ஐ.பி.எல்., அணிகளில் இருந்து ரெய்னா, ரகானே, மலிங்கா, ஸ்டீவ் ஸ்மித் விடுவிக்கப்படலாம்.
ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் வரும் ஏப்.,–மே மாதங்களில் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்வதற்கான ‘மினி’ ஏலம் பிப். 11ல் நடக்க உள்ளது. இதற்கு தயாராகும் வகையில், ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு தேவையற்ற வீரர்களை ஜன. 21 க்குள் கழற்றி விட வேண்டும்.
இதனால் சென்னை அணியில் இருந்து கேதர் ஜாதவ், பியுஸ் சாவ்லா, ஹர்பஜன் சிங், இம்ரான் தாகிர் உள்ளிட்டோர் விடுவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இதனிடையே 2020 சீசனில் துபாயில் இருந்து திடீரென நாடு திரும்பிய துணைக் கேப்டன் ரெய்னா, தற்போது நடக்கும் சையது முஷ்தாக் அலி தொடரில் 4 போட்டியில் 98 ரன் தான் எடுத்தார். இதனால் ரெய்னாவை (ரூ. 11 கோடி) சென்னை அணி சேர்க்காது எனத் தெரிகிறது. 2008க்குப் பின் மீண்டும் ரெய்னா ஏலத்தில் வரலாம்.
மும்பை அணி வேகப்பந்து வீச்சாளராக கடந்த 10 ஆண்டுக்கும் மேல் இருந்தார் இலங்கையின் மலிங்கா. 2018 தொடரில் காயத்தால் பங்கேற்காத போதும், பவுலிங் ஆலோசகர் ஆனார். 2019ல் சென்னை அணியை சாய்த்து, மும்பை கோப்பை வெல்ல உதவினார். இவர் இம்முறை விடுவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
தவிர, டில்லி அணியின் ரகானே, கோல்கட்டா அணியின் தினேஷ் கார்த்திக், ராஜஸ்தான் அணியின் ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அடுத்த சில நாட்களில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.