மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்காக மெல்போர்ன் வந்த 72 வீரர், வீராங்கனைகள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் வரும் பிப். 8 முதல் 21 வரை நடக்கவுள்ளது. இதற்காக வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் என 1200 பேர் தனித்தனி விமானங்களில் ஆஸ்திரேலியா அழைத்து வரப்பட்டனர்.
இதில் லாஸ் ஏஞ்சல்ஸ், அபுதாபி, தோகாவில் இருந்து வந்த மூன்று விமானங்களில் பயணித்த பணியாளர்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா இருப்பது தெரிந்தது. இதனால் இந்த விமானங்களில் வந்த கிராண்ட்ஸ்லாம் கோப்பை வென்றவர் உட்பட 72 வீரர், வீராங்கனைகளும் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர். அடுத்த 14 நாட்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டர்.
மூன்று கட்ட சோதனையில் ‘நெகட்டிவ்’ என வந்தால் மட்டும் தான் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். தவிர விதிகளை மீற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஒருவேளை மீறும் பட்சத்தில் போலீஸ் பாதுகாப்புடன் கூடிய இடத்துக்கு மாற்றப்படுவர் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் கோபத்தில் உள்ளனர்.