மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் பல்வேறு தடைகளுக்குப் பின் வரும் பிப். 8 முதல் 21 வரை நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் துபாய் (பெண்கள்), கத்தாரில் (ஆண்கள்) நடந்தன. இதையடுத்து வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் என 1200 பேரை ஆஸ்திரேலியா அழைத்து வர 15 தனி விமானங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.
இதில் லாஸ் ஏஞ்சல்சில் இருந்து மெல்போர்ன் வந்த விமானத்தில் இருந்த பணியாளர் உட்பட 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. பெலாரசின் அசரன்கா உள்ளிட்ட 24 பேர் அந்த விமானத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அனைவரும் ஓட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அதேபோல அபுதாபியில் இருந்து வந்த மற்றொரு பயணிக்கு கொரோனா இருப்பது தெரியவர, இதில் வந்த 23 நட்சத்திரங்களும் தனிமைப்படுத்தப் பட்டனர்.
இந்த 47 பேரும் மருத்துவ பரிசோதனையில் தேறினால் மட்டுமே பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவர். தவிர ஒட்டல் அறைகளை விட்டும் வெளியேற முடியாது. மற்ற நட்சத்திரங்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் தினமும் 5 மணி நேரம் பயிற்சியில் ஈடுபட அனுமதி தரப்பட்டது.