பம்போலிம்: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் லீக் போட்டியில் சென்னை அணி 2–1 என ஒடிசாவை வென்றது.
இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் 7வது சீசன் நடக்கிறது. கோவாவின் பம்போலிம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் இரு முறை சாம்பியன் ஆன சென்னை அணி, ஒடிசாவை எதிர்கொண்டது. போட்டியின் 15வது நிமிடம் சென்னை அணியின் இஸ்மாயில் ஒரு கோல் அடித்தார்.
21 வது நிமிடம் சென்னை அணிக்கு ‘பெனால்டி’ கிடைத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திய இஸ்மாயில் இப்போட்டியில் இரண்டாவது கோல் அடிக்க, முதல் பாதியில் சென்னை அணி 2–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் ஒடிசா வீரர் மவுரிசியா (63வது) ஒரு கோல் அடித்தார். முடிவில் சென்னை அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இத்தொடரில் சென்னை அணி பெற்ற 3வது வெற்றி இது. 11 போட்டியில் 3 வெற்றியுடன் (5 ‘டிரா’, 3 தோல்வி) 13 புள்ளிகள் பெற்று, பட்டியலில் 7வது இடத்துக்கு முன்னேறியது.