பிரிஸ்பேன்: பிரிஸ்பேன் டெஸ்டில் தமிழக ‘வேகப்புயல்’ நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட ‘பார்டர் – கவாஸ்கர்’ டிராபி தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. சிட்னியில் நடந்த மூன்றாவது போட்டி ‘டிரா’ ஆனது. தொடர் 1–1 என சமனில் உள்ளது.
இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் நாளை துவங்குகிறது. இந்திய அணியை பொறுத்தவரை முகமது ஷமி (வலது முழங்கை), உமேஷ் யாதவ் (வலது கணுக்கால்), லோகேஷ் ராகுல் (மணிக்கட்டு சுளுக்கு), ஜடேஜா (இடது கை பெருவிரல்), ஹனுமா விஹாரி (தொடையின் பின்பகுதி) என பலர் காயத்தால் வெளியேறினர்.
அஷ்வின் எப்படி
ஏற்கனவே அணியில் உள்ள புஜாரா (கைவிரல்), ரிஷாப் பன்ட் (இடது கை), மயங்க் அகர்வால் (வலது கை) லேசான காயத்தினால் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் பும்ரா அடிவயிற்று வலி காரணமாக, நடக்கக்கூட சிரமப் படுகிறாராம். இவரை நாளை களமிறக்கி ‘ரிஸ்க்’ எடுக்க அணி நிர்வாகம் விரும்பவில்லை.
முதுகுவலியால் அவதிப்படும் சீனியர் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினும் நாளை துவங்கும் பிரிஸ்பேன் டெஸ்டில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது.
நான்கு ‘வேகங்கள்’
இதனால் முகமது சிராஜ், நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூருடன், நான்காவது வேகப்பந்து வீச்சாளராக தமிழகத்தின் நடராஜன் அறிமுக வாய்ப்பு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அஷ்வின் களமிறங்கினாலும், மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் இடத்தில் சைனி அல்லது நடராஜன் சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது.
நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தால், அது அவருக்கு சிறந்த பொங்கல் பரிசாக அமையும்.
இதுகுறித்து இந்திய அணி தரப்பில் கூறுகையில்,‘இந்திய அணியில் இடம் பிடிக்க ஷர்துல் தாகூர், நடராஜன் இடையே போட்டி ஏற்படவில்லை. நடராஜன், சைனி இடையில் தான் போட்டி நிலவுகிறது. காபா மைதானம் வேகம், பவுன்சருக்கு சாதகமான மைதானம் என்பதால் சைனிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. தவிர இவர் மீது சற்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை அஷ்வின் களமிறங்காத பட்சத்தில், நான்காவது வேகப்பந்து வீச்சாளரை களமிறக்க திட்டமிடுவோம்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைதானம் எப்படி
பிரிஸ்பேன் மைதானம் ஆஸ்திரேலிய அணியின் கோட்டையாக திகழ்கிறது. 1931 முதல் இங்கு நடந்த 62 டெஸ்டில் 40ல் ஆஸ்திரேலியா வென்றது. 13 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இங்கிலாந்து 4, விண்டீஸ் 3, நியூசிலாந்து 1ல் வென்றன. 1960ல் விண்டீஸ் மோதிய போட்டி ‘டை’ ஆனது. 1989 க்குப் பின் இங்கு களமிறங்கிய 30 டெஸ்டில் ஆஸ்திரேலியா ஒன்றில் கூட தோற்கவில்லை. 24ல் வென்றது. 6 போட்டி ‘டிரா’ ஆனது. இந்திய அணி பங்கேற்ற 6 டெஸ்டில் 5ல் தோற்றது. 2003ல் மட்டும் ‘டிரா’ செய்தது.