மும்பை: சையது முஷ்தாக் அலி டிராபி தொடரில் டில்லி அணி இரண்டாவது வெற்றி பெற்றது.
இந்தியாவில் முதல் தர சையது முஷ்தாக் அலி டிராபி ‘டுவென்டி–20’ தொடர் தற்போது நடக்கிறது. மும்பையில் நடந்த லீக் போட்டியில் ஷிகர் தவான் கேப்டனாக உள்ள டில்லி அணி, ஆந்திராவை சந்தித்தது. முதலில் களமிறங்கிய ஆந்திர அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 124 ரன்கள் மட்டும் எடுத்தது. டில்லி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, 2 விக்கெட் சாய்த்தார். எளிய இலக்கைத் துரத்திய டில்லி அணிக்கு தவான் (5) ஏமாற்றம் தந்தார். ‘மிடில் ஆர்டரில்’ அனு ராவத் (33), ஹிம்மத் சிங் (32), லலித் (20) கைகொடுக்க டில்லி அணி 17 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது. இது இத்தொடரில் டில்லி பெற்ற இரண்டாவது வெற்றி.
இன்று தமிழகம்
தமிழக அணி தனது முதல் இரு போட்டியில் அசாம், ஜார்க்கண்ட்டை வென்றது. இன்று தனது மூன்றாவது போட்டியில் தமிழக அணி, ஒடிசாவை சந்திக்கிறது.