துபாய்: ஐ.சி.சி., சிறந்த கேப்டனுக்கான கருத்துக் கணிப்பில் கோஹ்லியை முந்தினார் இம்ரான் கான்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் ஒருநாள் அணிக்கு கேப்டனான பின், பேட்டிங் சராசரியை அதிகரித்து, அணியை சிறப்பாக வழிநடத்தியது யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிரதமருமான இம்ரான் கான் (52.34), இந்தியாவின் கோஹ்லி (பேட்டிங் சராசரி 73.88), தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (63.94), ஆஸ்திரேலிய பெண்கள் அணி கேப்டன் மெக் லான்னிங் (60.93) என நான்கு பேர் இடம் பெற்றனர்.
24 மணி நேரம் மட்டும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 5,36,346 ஓட்டுகள் பதிவாகின. இதில் 1992ல் உலக கோப்பை வென்று தந்த இம்ரான் கான் 47.3 சதவீதம் ஓட்டுகள் பெற்று முதலிடம் பெற்றார். கோஹ்லிக்கு 46.2 சதவீத ஓட்டுகள் மட்டும் கிடைக்க இரண்டாவது இடம் தான் கிடைத்தது.
டிவிலியர்ஸ் (6%), மெக்லான்னிங் (0.5%) அடுத்த இரு இடங்களை பெற்றனர்.
ஐ.சி.சி., சார்பில் கடந்த 10 ஆண்டுகளில் பல பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகள் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவர் கூட இடம் பெறவில்லை. தற்போது இம்ரான் தேர்வு செய்யப்பட்டதை, பாகிஸ்தானிய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.