எமிரேட்சில் நடந்த 13வது ஐ.பி.எல்., சீசனில் பங்கேற்ற இந்திய வீரர்கள், ஆஸ்திரேலியா சென்று 3 ஒருநாள், 3 ‘டுவென்டி–20’, நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகின்றனர்.
இத்தொடருக்கு முன் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, தமிழக ‘சுழல்’ வீரர் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் காயத்தால் விலகினர். அதன்பின் முதல் டெஸ்டில் முகமது ஷமி, 2வது டெஸ்டில் உமேஷ் யாதவ், பயிற்சியின் போது லோகேஷ் ராகுல், 3வது டெஸ்டில் ரவிந்திர ஜடேஜா என பலர் விலகினர்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியது:
ஆஸ்திரேலிய தொடரின் போது நிறைய இந்திய வீரர்கள் காயமடைந்திருப்பது வருத்தமான விஷயம். இதற்கு, ஐ.பி.எல்., தொடர் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் வழக்கமாக மார்ச்–மே மாதங்களில் நடத்தப்படும் இத்தொடர், கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, பின் எமிரேட்சில் செப்டம்பர்–நவம்பரில் நடத்தப்பட்டது.
இத்தொடருக்கு பின் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய தொடருக்கு வந்துவிட்டனர். தொடர்ச்சியாக இரண்டு மிகப் பெரிய தொடர்களில் பங்கேற்றது காயம் ஏற்பட அதிக வாய்ப்பை உண்டாக்கியது. ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்ற வார்னர், ஸ்டாய்னிஸ் ஆகியோரும் ஒருநாள் தொடரின் போது காயமடைந்தனர்.
இவ்வாறு லாங்கர் கூறினார்.