பம்போலிம்: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில் சென்னை, ஒடிசா அணிகள் மோதுகின்றன. இதில் சென்னை அணி, அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி எழுச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 7வது சீசன் கோவாவில் நடக்கிறது. இன்று, பம்போலிம் நகரில் நடக்கவுள்ள லீக் போட்டியில் 2 முறை கோப்பை வென்ற சென்னை அணி, ஒடிசா அணியை எதிர்கொள்கிறது.
சென்னை அணி, இதுவரை விளையாடிய 10 போட்டியில், 2 வெற்றி, 5 ‘டிரா’, 3 தோல்வி என, 11 புள்ளிகளுடன் உள்ளது. கடைசியாக விளையாடிய 4 போட்டியில், 3 ‘டிரா’, ஒரு தோல்வியை பெற்றது. இதில் ஒடிசா அணிக்கு எதிரான போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது. இப்போட்டியில் சென்னை அணியின் ரஹீம் அலி, ஜாகுப் சில்வெஸ்டர் கோலடிக்க கிடைத்த பொன்னான வாய்ப்பை வீணடித்தனர். கேப்டன் கிரிவெல்லாரோ இல்லாத பாதிப்பு நன்றாக தெரிந்தது. அனிருத் தபா, லாலியன்ஜுவாலா சாங்தே, இஸ்மாயில், இலி சபியா, ஜெர்ரி உள்ளிட்டோர் கைகொடுத்தால் 3வது வெற்றியை பெறலாம்.
ஒடிசா அணி, இதுவரை பங்கேற்ற 10 போட்டியில், ஒரு வெற்றி, 3 ‘டிரா’, 6 தோல்வி என, 6 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளது. ஒடிசா வீரர்கள் சிலர் காயமடைந்திருப்பதால் இன்று புதிய வீரர்களுடன் களமிறங்கலாம். சென்னைக்கு எதிராக ‘கோல் கீப்பிங்கில்’ அசத்திய அர்ஷ்தீப் சிங், மீண்டும் தொல்லை தரலாம். ஸ்டீவன் டெய்லர், டீகோ மவுரிசியோ, கோலி அலெக்சாண்டர், மார்சிலினோ, ஜெர்ரி மாவிஹ்மிங்தங்கா உள்ளிட்டோர் கைகொடுத்தால் 2வது வெற்றியை பதிவு செய்யலாம்.
13 முறை
ஐ.எஸ்.எல்., அரங்கில் சென்னை, ஒடிசா அணிகள் 13 முறை மோதின. இதில் சென்னை 1, ஒடிசா 6ல் வெற்றி பெற்றன. ஆறு போட்டிகள் ‘டிரா’ ஆனது. இவ்விரு அணிகள் மோதிய போட்டியில் சென்னை 15, ஒடிசா 24 கோல் அடித்தன.
பெங்களூரு ‘டிரா’
நேற்று, வாஸ்கோடகாமாவில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1–1 என, ‘டிரா’ ஆனது. பெங்களூரு சார்பில் ராகுல் (49வது நிமிடம்), வடகிழக்கு அணிக்கு லுாயிஸ் மச்சாடோ (27வது) தலா ஒரு கோலடித்து கைகொடுத்தனர்.